பாண்டவபுராவில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபர்


பாண்டவபுராவில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபர்
x
தினத்தந்தி 9 Oct 2017 10:17 PM GMT (Updated: 9 Oct 2017 10:17 PM GMT)

பாண்டவபுராவில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து தர்ம-அடி கொடுத்தனர்.

மண்டியா, 

மண்டியா மாவட்டம் பாண்டவபுராவை சேர்ந்தவர் சுஜாதா. இவர் நேற்று காலை தரசகுப்பே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பாண்டவபுராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், சுஜாதா கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த சுஜாதா, ‘திருடன்... திருடன்...’ என கூறிக் கொண்டு அந்த மர்மநபர் பின்னால் ஓடினார். இந்த வேளையில், சுஜாதாவின் கூச்சல் சத்தத்தை கேட்ட அந்தப்பகுதி மக்களும், அந்த நபரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.

வாலிபர் கைது

சிறிது தூரத்தில் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிய அந்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்த தங்கச்சங்கிலியையும் பொதுமக்கள் பறிமுதல் செய்து சுஜாதாவிடம் கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பாண்டவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் அந்த நபரை ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிவாஜி (வயது 25) என்பதும், பாண்டவபுரா பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாஜியை கைது செய்தனர். இதுகுறித்து பாண்டவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story