கிள்ளை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை


கிள்ளை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Oct 2017 11:41 PM GMT (Updated: 10 Oct 2017 11:40 PM GMT)

கிள்ளை அருகே பயிர்கடன், காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பரங்கிப்பேட்டை,

கிள்ளை அருகே தில்லை விடங்கன் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பு.மடுவங்கரை, பின்னத்தூர், தில்லைவிடங்கன், கீழச்சாவடி, மேலச்சாவடி, நவாப்பேட்டை உள்பட 13 கிராமங்களில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி 13 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இடுபொருட்கள், பயிர்கடன், காப்பீட்டு தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு தில்லைவிடங்கன் கிராமத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் தாசில்தார் மகேஷ், கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பதிவாளர் ஜெகநாதன், கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், 13 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட் கள், பயிர்கடன், காப்பீட்டு தொகை ஆகியவற்றை வழங்கவில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர், செயலாளர் முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய இடுபொருட்கள், பயிர்கடன், காப்பீட்டு தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு தாசில்தார் மகேஷ், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story