துப்புரவு பணியை ஒப்பந்தம் எடுத்தவர் கூலி தராததால் தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டம்


துப்புரவு பணியை ஒப்பந்தம் எடுத்தவர் கூலி தராததால் தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2017 11:42 PM GMT (Updated: 10 Oct 2017 11:42 PM GMT)

கடலூர் நகரில் துப்புரவு பணியை ஒப்பந்தம் எடுத்தவர், 4 மாதங்களாக கூலி தராததால் தனியார் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

கடலூர்,

கடலூர் நகராட்சியில் போதிய துப்புரவு தொழிலாளர்கள் இல்லாததால், திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், முதுநகர் ஆகிய இடங்களில் துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியை 3 தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இதற்காக அந்த தனியார் நிறுவனங்களுக்கு மாதந்தோறும் கூலியாக மொத்தம் சுமார் 21 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த தனியார் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர் சட்டப்படி அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கூலியைக்கூட வழங்காமல் வஞ்சித்து வருவதாக கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம் குற்றம் சாட்டி வருகிறது.

குறிப்பாக 9, 10, 11 ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் 30 துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர் சட்டப்படி அரசு நிர்ணயித்த நாளொன்றுக்கு குறைந்த பட்ச கூலியாக 300 ரூபாய் வழங்க வேண்டுமாம், ஆனால் நாளொன்றுக்கு 180 ரூபாய் தான் வழங்கப்படுகிறதாம்.

அதிலும் கடந்த 4 மாதமாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அந்த தனியார் நிறுவனம் ஊதியம் வழங்கவில்லையாம். இதனால் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் 4 மாத கூலி பாக்கியை தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கித்தர வலியுறுத்தி நேற்று காலையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் சார்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுப்புராயன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமானை சந்தித்து பேசினார்கள்.

துப்புரவு பணியை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், தனது தொழிலாளர்களுக்கு கூலி வழங்கவில்லையெனில், நேரடியாக நகராட்சி நிர்வாகமே அந்த தொழிலாளர்களுக்கு கூலியை வழங்கலாம் என்று ஒப்பந்த தொழிலாளர் சட்டம் கூறுகிறது, அதன்படி நேரடியாக தொழிலாளர்களுக்கு கூலி வழங்க வேண்டும் என்று ஆணையாளரிடம் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கு நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் மறுத்து விட்டதாக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன் நிருபர்களிடம் தெரிவித்தார். இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். 

Next Story