காட்மா சார்பில் பிரதமருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் தொடக்கம்


காட்மா சார்பில் பிரதமருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 11 Oct 2017 5:19 AM IST (Updated: 11 Oct 2017 5:19 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்கக்கோரி காட்மா சங்கம் சார்பில் பிரதமருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் தொடங்கியது. இதில் 20 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஏராளமான குறுந்தொழில் கூடங்கள் உள்ளன. இங்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஆர்டர் பெற்று உதிரிபாகங்களை உற்பத்தி செய்து, பின்னர் அந்த நிறுவனங்களுக்கு கொடுக்கும் தொழில் நடந்து வருகின்றது. அவ்வாறு ஜாப் ஆர்டர் பெற்று பணி செய்யும் குறுந்தொழில் கூடங்கள் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரிவிகிதம் குறைக்கப்படவில்லை. இதை கண்டித்து பிரதமருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடிக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று காட்மா சார்பில் அறிவிக்கப்பட்டது.


அதன்படி காட்மா சங்க தலைவர் எஸ்.ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்துக்கு வந்தனர். பிறகு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதுடன், கோரிக்கை அடங்கிய மனுவை பிரதமர் மோடிக்கு பதிவு தபாலில் அனுப்பினார்கள்.

அதன் பின்னர் அந்த மனு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் ஹாஷ்முக் ஆதியா, நிதி அமைச்சக கூடுதல் செயலாளர் அருண் கோயல், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சந்திர மவுலி, கோவை ஜி.எஸ்.டி. கமிஷனர் சீனிவாசராவ் ஆகியோருக்கும் பதிவு தபாலில் அனுப்பப்பட்டது.

பின்னர் இதுகுறித்து காட்மா தலைவர் எஸ்.ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-


நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் குறுந்தொழில் கூடங்களுக்கு வரி விதிக்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக தொழில் செய்யும் குறுந்தொழில் கூடங்கள் கண்டிப்பாக ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் உதிரி பாகங்களுக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

அதுபோன்று ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக தொழில் செய்யும் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆனால் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்யாத தொழில் கூடங்களுக்கு பெரிய நிறுவனங்கள் பொருட்களை செய்ய கொடுக்கும்போது அதற்கு அந்த பெரிய நிறுவனங்களே ஜி.எஸ்.டி. செலுத்திவிட்டு, ஒரு மாதம் கழித்து அந்த தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்த தொழில் கூடங்களுக்கே பெரிய நிறுவனங்கள் ஜாப் ஆர்டர் கொடுக்கிறார்கள். இதனால் எங்களுக்கு சரிவர ஜாப் ஆர்டர் கிடைக்காததால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை நீடித்தால் இன்னும் 3 மாதங்களுக்குள் ஏராளமான குறுந்தொழில் கூடங்களை இழுத்து மூடக்கூடிய நிலை ஏற்பட்டு விடும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்திதான் பிரதமருக்கு பதிவு தபால் மூலம் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். விரைவில் எங்களுக்கு நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். நேற்று மட்டும் 500 பதிவு தபால் அனுப்பப்பட்டு உள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் 45 நாட்களுக்குள் பதிவு தபால் மற்றும் மின்அஞ்சல்கள் மூலம் 20 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் காட்மா பொதுச்செயலாளர் சிவக்குமார், துணை பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண் டனர். 

Next Story