திருப்பூரில் நள்ளிரவில் வட மாநில வாலிபர்களிடம் பணம்-செல்போன் பறிப்பு


திருப்பூரில் நள்ளிரவில் வட மாநில வாலிபர்களிடம் பணம்-செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2017 5:24 AM IST (Updated: 11 Oct 2017 5:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நள்ளிரவில் வட மாநில வாலிபர்களிடம் பணம்-செல்போனை வழிப்பறி செய்தது தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனுப்பர்பாளையம்,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அஜய் (வயது 20) மற்றும் பல்ராம் நாய்க் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏ.பி. நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் வேலை முடிந்து அவர்கள் இருவரும் தாங்கள் தங்கி உள்ள அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் நடந்து வந்தனர். அவர்கள் 3 பேரும் திடீரென்று அஜய் மற்றும் பல்ராம் நாய்க் ஆகியோரை தடுத்து நிறுத்தி மிரட்டி அவர்களிடம் இருந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்து 500-ஐ பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் 2 பேரும் அவர்கள் மொழியில் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுள்ளனர். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு யாரும் வரவில்லை. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து அஜய் மற்றும் பல்ராம் நாய்க் ஆகியோர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேலாளர் ஈஸ்வரமூர்த்தி (39) உதவியுடன் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமுண்டிபுரம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் திருப்பூர் ராஜீவ்நகரை சேர்ந்த ஜீவா (24), வலையங்காட்டை சேர்ந்த தினேஷ் என்கிற மணிகண்டன் (23) மற்றும் சாமுண்டிபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. மேலும் காந்திநகர் ஏ.பி. நகரில் ரோட்டில் நடந்து சென்ற வடமாநில வாலிபர் களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்சென்றது இவர்கள்தான் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் 17 வயது சிறுவனை காப்பகத்திலும், மற்ற இருவரையும் சிறையிலும் அடைத்தனர். 

Next Story