மாணவர்கள் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


மாணவர்கள் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 11 Oct 2017 5:30 AM IST (Updated: 11 Oct 2017 5:30 AM IST)
t-max-icont-min-icon

முடங்கினால் சிலந்தியும் உங்களை சிறைபிடிக்கும். மாணவர்கள் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

உசிலம்பட்டி,

மதுரை கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் முதுகலை இயற்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் விக்னேஷ்குமார். இவர் சைக்கிளை கைபிடிக்காமல் நீண்டதூரம் ஓட்டி (122 கிலோ மீட்டர் தூரம்) உலக சாதனை படைத்து கின்னசில் இடம் பிடித்தார். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா அருள் ஆனந்தர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பேசில் சேவியர் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜா, கல்லூரி அதிபர் குழந்தைசாமி, செயலாளர் மணி வளன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவனை பாராட்டி பேசினர். இந்த விழாவில் அ.தி.மு.க. பிரமுகர் கிரம்மர் சுரேஷ், உசிலம்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-

முடங்கி கிடந்தால் சிலந்தி கூட சிறைபிடிக்கும். முடிந்தவனுக்கு இமயம்கூட எட்டும் தூரம் தான். கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர் விக்னேஷ் தொடர்ந்து முயற்சி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரை போல் ஒவ்வொரு மாணவனும் முயற்சி செய்தால் உங்களால் முடியாதது ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் துணை முதல்வர் ஜோசப் செல்வராஜ் நன்றி கூறினார்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, சசிகலாவை பற்றி என் சொந்த கருத்தை தான் கூறினேன். அதைப்பற்றி மேலும் கூறுவதற்கு ஒன்றுமில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து நலத்திட்ட பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.

Next Story