அரசு மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு


அரசு மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 11 Oct 2017 5:34 AM IST (Updated: 11 Oct 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

எனவே, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும், காய்ச்சல் பரிசோதனைக்கு நவீன கருவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதற்காக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதையடுத்து அங்கிருந்து அரசு மருத்துவமனையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாலசந்திரபோஸ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, பொருளாளர் சரண்குமார், துணை செயலாளர் பாலாஜி, மாதர் சங்க மாவட்ட தலைவி ஜானகி, பொருளாளர் தமயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி அரசு மருத்துவமனை நோக்கி சென்றனர்.

ஆனால், அண்ணா சிலை அருகே போலீசார் சாலையில் தடுப்புகளை வைத்து ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாரையும் மீறி வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்ற முயன்றனர். இதனால் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி, இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

மேலும் தடுப்புகளை தாண்டி சென்றவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி சென்றனர்.

இதனால் போலீசாருக்கும், வாலிபர் சங்கத்தினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவழியாக அரசு மருத்துவமனையை முற்றுகையிட வந்த 47 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். 

Next Story