சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, காரம் உற்பத்தி செய்பவர்கள் மீது நடவடிக்கை


சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, காரம் உற்பத்தி செய்பவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2017 5:39 AM IST (Updated: 11 Oct 2017 5:39 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, காரம் உற்பத்தி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இனிப்பு, காரம் தயாரிக்கும் இடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கலப்படம் செய்யப்பட்ட, காலாவதி தேதி முடிந்த உணவு பொருட்களை பயன்படுத்தக்கூடாது. உணவு வகைகளை தயாரிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான வண்ணங்கள் சேர்க்கக்கூடாது. பணியாளர்கள் தூய்மையான ஆடைகளை அணிந்தபடி இனிப்பு, கார வகைகளை தயாரிக்க வேண்டும்.

நடவடிக்கை

உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் இடத்தில் பணியாளர்கள் புகை பிடித்தல், வெற்றிலை பாக்கு போடுதல், எச்சில் துப்புதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக உணவு தயாரிக்கும், விற்பனை இடத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உரிமத்தை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.

உணவு பொருட்களை திறந்த நிலையில் வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. எண்ணெய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரமற்ற எண்ணெயை விற்பனை செய்யக்கூடாது. எனவே சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, கார வகைகளை உற்பத்தி செய்வதோ, விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுற்றுப்புற பகுதியில் மழைநீர், கழிவுநீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறிஉள்ளார். 

Next Story