மதுரவாயலில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்


மதுரவாயலில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 12:26 AM GMT (Updated: 2017-10-11T05:56:31+05:30)

மதுரவாயலில் சாலையை சீரமைக்கக்கோரி, பழுதடைந்த சாலையில் தேங்கிய மழைநீரில் வாத்துக்களை மேய விட்டும், மீன்பிடித்தும் பொதுமக்கள் நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

மதுரவாயல் ஏரிக்கரையில் இருந்து போரூரை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குவது மதுரவாயல் ஏரிக்கரை - போரூர் சாலை ஆகும். வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த சாலையின் ஒரு பகுதி வானகரம் ஊராட்சிக் கும், மறு பகுதி சென்னை மாநகராட்சிக்கும் உட்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் இந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இரு புறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் சேர்ந்து சாலையை சீரமைத்து தரக்கோரி நேற்று நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழுதடைந்த சாலையில் குளம் போல் தேங்கி உள்ள மழைநீரில் இறங்கிய அவர்கள், வலை வீசி மீன்பிடித்தும், வாத்துக்களை அதில் மேய விட்டும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

போராட்டம் குறித்து அப் பகுதி மக்கள் கூறியதாவது:-

சாலையை சீரமைக்கப்படாததால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதன்காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடிவதில்லை. பழுதடைந்த சாலை காரணமாக இங்குள்ள கடைகளில் வியாபாரம் ஏதும் நடக்காமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு மினி பஸ்சும் செல்வதில்லை.

முதல்கட்டமாக இந்த நூதனபோராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதுரவாயலில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story