“எவ்வளவுதான் முயன்றாலும் தி.மு.க.வால் மாற்று சக்தியாக வர முடியாது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


“எவ்வளவுதான் முயன்றாலும் தி.மு.க.வால் மாற்று சக்தியாக வர முடியாது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 11 Oct 2017 6:13 AM IST (Updated: 11 Oct 2017 6:13 AM IST)
t-max-icont-min-icon

“எவ்வளவுதான் முயன்றாலும் தி.மு.க.வால் மாற்று சக்தியாக வர முடியாது” என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் பல்வேறு கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இணைப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதுவே தமிழகத்தில் பா.ஜனதா, முக்கிய அரசியல் அங்கீகாரம் பெற்று வருகிறது என்பதற்கு உதாரணம் ஆகும். இதேபோன்று மாநில அளவில் மட்டும் இன்றி, மாவட்ட அளவிலும் பல இயக்கத்தை சேர்ந்தவர்கள் எங்களோடு இணைந்து வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா வலுப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் வாக்குச்சாவடி அளவிலும் எங்கள் பலத்தை அதிகரித்து வருகிறோம். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மத்திய மந்திரிகள் வர உள்ளனர். அதன் ஒரு பகுதியாக வருகிற 14-ந் தேதி மத்திய மந்திரி பியூஸ் கோயல், ராமநாதபுரம், மதுரை தொகுதிகளுக்கு வருகிறார். தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுப்படுத்துவதற்கான அத்தனை நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறோம்.

மாற்று சக்தியாக வர முடியாது

தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை தரும் கட்சியாக பா.ஜனதா இருக்கும். எவ்வளவு தான் முயன்றாலும், எதிர்க்கட்சியான தி.மு.க. ஒரு மாற்று சக்தியாக வர முடியாது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி, முதல்- அமைச்சரின் காப்பீடு திட்டத்துக்குள் டெங்கு காய்ச்சலை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன்படி தற்போது காப்பீடு திட்டத்துக்குள் டெங்கு காய்ச்சல் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் குறை சொல்வதிலேயே குறியாக உள்ளனர்.

டெங்கு காய்ச்சல்

தமிழக அரசு டெங்கு காய்ச்சலை தடுக்க மத்திய அரசிடம் எந்த உதவியையும் கேட்கவில்லை. ஒரு அசாதாரண சூழ்நிலை மாநிலத்தில் நிகழும்போது, அதற்கான உதவியை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும். மத்திய அரசு மட்டுமின்றி, தனியார் ஆஸ்பத்திரிகளின் பங்களிப்பையும் பெற வேண்டும். டெங்கு தற்போது உக்கிரமாக தாண்டவமாடிக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், உள்ளாட்சி நிர்வாகம் சரியாக நடைபெறாததால், சுகாதாரம் இல்லாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாக உள்ளது. முதல்-அமைச்சர், மக்கள் மீது கவனத்தை திருப்ப வேண்டும். உட்கட்சி பிரச்சினை அதிகமாக தாக்குவதால், மக்கள் பிரச்சினையில் அவர்களுக்கு கவனச்சிதறல்கள் ஏற்படுகிறது. அவரை சார்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமாக பேசி வருகின்றனர். அதனையும் கட்டுப்படுத்தி, முதலில் மக்களுக்கான நிர்வாகம் சரியாக கிடைக்கும்படி தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story