கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆபத்தான குடியிருப்பில் வசிக்கும் மருத்துவ பணியாளர்கள்


கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆபத்தான குடியிருப்பில் வசிக்கும் மருத்துவ பணியாளர்கள்
x
தினத்தந்தி 11 Oct 2017 12:00 PM IST (Updated: 11 Oct 2017 11:02 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அரசு மருத்துவமனைவளாகத்தில் ஆபத்தான குடியி ருப்பில் மருத்துவ பணியாளர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக குடியிருப்பு கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கோத்தகிரி,

கோத்தகிரி நகரின் மைய பகுதியில் பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. கோத்தகிரி பேரூராட்சி மற்றும் 11 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
இங்கு அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, சி.டி. ஸ்கேன், குழந்தைகள் பிரிவு, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசு மருத்துவமனையில் உள்ளன. ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகளாக தினந்தோறும் 400-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். மேலும், உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் 14 மருத்துவர்கள், 16 செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. பாழடைந்து கிடக்கும் இந்த குடியிருப்புகள் பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளது.

இதன் காரணமாக பழுதடைந்த இந்த குடியிருப்புகளை காலி செய்து விட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் வெளி இடங்களில் வாடகை வீடுகளில் தங்கி உள்ளனர். இரவு நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைக்காக நோயாளிகள் வரும்போது டாக்டர்கள் பணியில் இருப்பது இல்லை. அவர்கள் வெளியே தங்கி இருப்பதால் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதற்குள் விபரீதம் ஏற்படுகிறது.

ஆஸ்பத்திரி வளாகத்தில் எக்ஸ்ரே பிரிவுக்கு அருகே கட்டப்பட்டு உள்ள 2 மருத்துவர், செவிலியர் குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் உபயோகமற்ற பொருட்கள் போட்டு வைக்கப்பட்டு உள்ளது.
வெளிநோயாளிகள் பிரிவு அருகே உள்ள குடியிருப்பும், நுழைவு வாயில் அருகே உள்ள குடியிருப்பும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப் படுகின்றது. இருப்பினும் அவசர தேவையை கருத்தில் கொண்டு அதில் 3 டாக்டர்கள், ஒரு மருத்துவ பணியாளர்கள் தங்கி உள்ளனர். பழுதடைந்த ஆபத்தான குடியிருப்பில் உயிருக்கு பயந்து குடியிருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. ஆபத்தான கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊட்டி அல்லது 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்படுவதால் பெரும்பாலான நோயாளிகள் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விடுகின்றனர்.

எனவே அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர். இருதய நோய் நிபுணர் ஆகியோரை நியமிக்க வேண்டும். பூட்டி கிடக்கும் ரத்த சேமிப்பு அறையை திறக்க வேண்டும். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் கோத்தகிரி பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் நிதி அல்லது தமிழக அரசின் சுகாதார துறை நிதி ஆகியவற்றின் மூலம் குடியிருப்புகளை புதுப்பித்து அலுவலர்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதன் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும்.

மேலும், பழுதடைந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்புகள் முழுவதும் இடித்து அகற்றி விட்டு புதிதாக குடியிருப்புகள் கட்ட வேண்டும். மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கும் வகையில் குடியிருப்புகள் கட்டி கொடுக்க வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

Next Story