வெம்பக்கோட்டை பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த சாலைகள்


வெம்பக்கோட்டை பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த சாலைகள்
x
தினத்தந்தி 11 Oct 2017 5:00 PM IST (Updated: 11 Oct 2017 11:27 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் தொடர்மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாயில்பட்டி,

கடந்த 2 மாதங்களாக வெம்பக்கோட்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கிராமச்சாலைகள் பெரும் அளவு சேதமாகி விட்டன. வி.மீனாட்சிபுரத்தில் இருந்து பூசாரிநாயக்கன்பட்டி வழியாக சுப்பிரமணியபுரம் செல்லும் சாலை, கோட்டைப்பட்டி செல்லும் சாலை, சேதுராமலிங்காபுரம் முதல் கீழ தாயில்பட்டி செல்லும் சாலை, தாயில்பட்டியில் இருந்து சேரநாயக்கன்பட்டி சாலை, எறவார்பட்டியில் இருந்து அச்சங்குளம் செல்லும் சாலை உள்ளிட்டவை பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகி விட்டன.

ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி தருகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் கூடுதலான சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

கூடுதலான மழை பொழிவை எதிர்பார்க்கும் வட கிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்க இருப்பதால் இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெம்பக்கோட்டை யூனியன் ஆணையரிடம் வெம்பக்கோட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சுந்தரபாண்டியன் மனுவும் கொடுத்துள்ளார்.

மேலும் வெம்பக்கோட்டை அணையிலிருந்து சிவகாசிக்கு குடிநீர் கொண்டு செல்ல சேரநாயக்கன்பட்டி பகுதியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை பழுதுபார்க்க தோண்டப்பட்ட குழிகள் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில் சிவகாசி நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆத்துபாலத்துக்கு செல்லும் மேற்கு பகுதி மிகவும் மோசமாக உள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்கவும், மத்திய சேனையில் இருந்து வெள்ளூர் வழியாக கவுண்டம்பட்டி வரையிலும் ஆமத்தூரில் இருந்து தவசிலிங்காபுரம் தெற்கு பகுதியில் உள்ள உப்போடை பாலம் வரையிலும் கிராமப்புற சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Next Story