பா.ஜனதாவினர் எதை செய்தாலும் அது அவர்களுடைய உரிமை நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி


பா.ஜனதாவினர் எதை செய்தாலும் அது அவர்களுடைய உரிமை நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி
x
தினத்தந்தி 11 Oct 2017 12:53 PM IST (Updated: 11 Oct 2017 12:53 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவினர் எதை செய்தாலும் அது அவர்களுடைய உரிமை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

மங்களூரு,

நடிகர் பிரகாஷ் ராஜ் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையில் விமானம் மூலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள பஜ்பே விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு நபருக்கும் எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் வேறுபட்டிருக்கும். ஒரே மாதியாக இருக்கும் என்பது தவறு. அவ்வாறு இருக்கவும் முடியாது. என் திரையுலக திறமையை பாராட்டி எனக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் இங்கு வந்தேன். எனக்கு இங்கு எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆனால் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் நான் விமர்சித்து பேசியதால் என்னை வரவேற்க பா.ஜனதாவினர் வரவில்லை. அவர்கள் என்னுடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நான் விருது பெறும் நிகழ்ச்சி நடக்கும்போது, போராட்டத்தில் ஈடுபட பா.ஜனதாவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ. அவர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களுடைய உரிமை. மக்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள்.
என்னை சிலர் விரும்புவார்கள். சிலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கும். ஆனால் நான் எதைப்பற்றியும் கவலைப்படப் போவதில்லை. நான் கண்டிப்பாக விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் விருது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டு சென்றார்.

உடுப்பி மாவட்டம் கோட்டா பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் அங்கு சென்றார். அப்போது உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த அகில கர்நாடக நாத பந்த ஜோகி சமாஜ சேவ சமிதி, இந்து ஜாக்கரண வேதிகே, ஜெய் பார்கவ பாலகா உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டினர். இதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை உடுப்பி போலீசார் கைது செய்தனர்.

Next Story