திருமணத்திற்கு மறுத்ததால் ஓட்டலில் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து காதலன் வெறிச்செயல்


திருமணத்திற்கு மறுத்ததால் ஓட்டலில் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து காதலன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 11 Oct 2017 8:03 AM GMT (Updated: 2017-10-11T13:33:41+05:30)

திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவியை ஓட்டல் அறையில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய அவரது காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஓட்டலில் சம்பவத்தன்று ஒரு இளம் ஜோடி தங்கியிருந்தனர். காலை 11 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர்.

ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே அவர்கள் தங்களிடம் இருந்த மாற்றுச்சாவியை கொண்டு கதவை திறந்தனர். அப்போது அறையில் இருந்த வாலிபர் ஊழியர்களை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இளம்பெண் ஓட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். அவரது உடலில் 5 இடங்களில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதை பார்த்து பதறி போன ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்பதும், அவர் வசாயில் தனது பெற்றோருடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மாணவியும், அவரை கத்தியால் குத்திய வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

அந்த வாலிபருக்கு வேறொரு இளம்பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இதன் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள கல்லூரி மாணவி மறுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் தான் கல்லூரி மாணவியை அவரது காதலன் ஓட்டலுக்கு அழைத்து சென்று சரமாரியாக கத்தியால் குத்தியது தெரியவந்தது.
போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story