டெங்கு கொசுவை ஒழிக்க 90 புகை தெளிப்பான் கருவிகள்


டெங்கு கொசுவை ஒழிக்க 90 புகை தெளிப்பான் கருவிகள்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:45 AM IST (Updated: 11 Oct 2017 8:16 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 90 புகை தெளிப்பான் கருவிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை,

தமிழகத்தின் பிரதான பிரச்சினையே இப்போது டெங்கு காய்ச்சல் தான். இந்த காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகிவிட்டனர். இன்னும் பலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புகை தெளிப்பான் கருவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 90 புகை தெளிப்பான் கருவிகளை வழங்கினார். அதனை சுகாதார பணிகளை மேற்கொள்ளும் வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.

அப்போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படாத வண்ணம் தேவையான முன் எச்சரிக்கை பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் அரசுத்துறை கட்டிடங்கள், ரெயில் நிலையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொசுக்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக புதிதாக 90 புகை தெளிப்பான் கருவிகள் வழங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களும் தங்கள் பகுதியில் கொசுஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 952 மஸ்தூர் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. தூசி மோகன், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் மீரா, கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story