குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் டிரைவரை கொன்ற தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் டிரைவரை கொன்ற தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 11 Oct 2017 11:15 PM GMT (Updated: 11 Oct 2017 7:30 PM GMT)

குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த டிரைவரை கொலை செய்த வழக்கில் தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்புக் கூறியது.

கோவை,

கோவையை அடுத்த வடவள்ளி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34), ஆட்டோ டிரைவர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். மேலும், போதை மருந்துகளை பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

ரமேஷின் தம்பி மனோஜ்குமார் (28). அவரிடம் ரமேஷ் மதுக்குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால் அண்ணன்- தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மனோஜ் குமாரின் நண்பர்களிடமும் மதுக்குடிக்க ரமேஷ் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர்களுக்கும் ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரமேசை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த ரமேஷ், ‘என்னை அடித்த உங்களை சும்மா விடமாட்டேன்’ என்று ஆவேசமாக கூறி உள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

ரமேசுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்ததால் அவர் யாரையாவது அழைத்து வந்து தங்களை தாக்கி விடுவாரோ என்று மனோஜ்குமாரும் அவரது நண்பர்களும் அச்சமடைந்தனர். இதனால் ரமேசை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 14.2.2009 அன்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ நிறுத்தத்தில் ரமேஷ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வெள்ளிங்கிரி (35), சங்கர் (25), விஜயஆனந்த் (29), பாலு (30) ஆகிய 5 பேரும் சென்றனர்.

அவர்கள் ரமேசிடம் மது குடிக்கலாம் என்று கூறிஉள்ளனர். மதுவுக்கு ஆசைப்பட்டு ரமேசும் அவர்களுடன் சென்றார். பின்னர் ரமேஷ் மதுஅருந்தினார். போதை தலைக்கேறியதும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ரமேசை ஒரு ஆட்டோவில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் ரமேசின் பிணத்தை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த நிலையில் பொள்ளாச்சியில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக வெள்ளிங்கிரியை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் ரமேசை கொலை செய்ததை போலீசாரிடம் கூறினார். கொலை நடந்து சுமார் 8 மாதங்களுக்கு பின்னர்தான் இந்த சம்பவம் வெளியே தெரிந்தது.

இதையடுத்து ரமேசின் பிணம் வீசப்பட்ட கிணத்துக்கு துடியலூர் போலீசார் சென்று பார்வையிட்ட னர். கிணற்றில் எலும்புகள் மட்டுமே கிடந்தன. ரமேஷ் கொலை தொடர்பாக மனோஜ்குமார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்புக்கூறப்பட்டது. அண்ணனை கொலை செய்த தம்பி மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வெள்ளிங்கிரி, விஜய்ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்புக்கூறினார். இந்த வழக்கில் பாலு மற்றும் சங்கர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story