கோவை அருகே கோவிலை இடித்து அகற்ற எதிர்ப்பு, பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு


கோவை அருகே கோவிலை இடித்து அகற்ற எதிர்ப்பு, பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2017 3:45 AM IST (Updated: 12 Oct 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ஐகோர்ட்டின் உத்தரவுபடி கோவிலை இடித்து அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில பெண்கள் சாமி ஆடியதால் பர பரப்பு ஏற்பட்டது.

துடியலூர்,

கோவையை அடுத்த ஜி.என்.மில்ஸ் அருகே சுப்பிரமணியம்பாளையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி அம்மன் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்டு உள்ளது.

எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த மருதாசலம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவிலை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

அதைத்தொடர்ந்து கோவை வடக்கு தாசில்தார் சிவக் குமார், பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேந்தன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை 10 மணியளவில் சுப்பிரமணியம்பாளையம் சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்ற முயன்றனர்.

அப்போது திடீரென அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெண்கள் சாமி ஆடியதால்...

அப்போது ‘ஐகோர்ட்டின் உத்தரவின்படி கோவில் இடித்து அகற்றப்பட உள்ளது. அதை தடுக்க முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று எச்சரித்தனர். இதையடுத்து பொக் லைன் எந்திரம் உதவியுடன் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது அங்கு நின்றிருந்த சில பெண்கள் திடீரென சாமி ஆடி ‘இந்த கோவிலை இடித்தால் பெரும் ஆபத்து விளையும்‘ என்று குறி சொல்லியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் ஆதிபராசக்தி அம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. 

Next Story