கொட்டாம்பட்டி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி; ரூ.4 கோடி நகைகள்-பணம் தப்பின


கொட்டாம்பட்டி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி; ரூ.4 கோடி நகைகள்-பணம் தப்பின
x
தினத்தந்தி 12 Oct 2017 4:45 AM IST (Updated: 12 Oct 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. போலீசாரை கண்டதும் கொள்ளை கும்பல் தப்பியோடியதால் ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் தப்பின.

கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள கச்சிராயன்பட்டியில் நான்கு வழிச்சாலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து பயிர்க்கடன் பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஊழியர்கள் பணி முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு சென்று விட்டனர். வங்கி அமைந்துள்ள பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம கும்பல் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிப்பதற்காக வந்தனர். முதலில் வங்கியின் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் வங்கியின் பின்புறம் சென்று ஜன்னல் கம்பிகளை கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர் ஜன்னல் வழியாக வங்கிக்குள் நுழைந்த கும்பல் நகை பெட்டகம் இருந்த அறையை உடைத்தனர். இதைதொடர்ந்து நகை பெட்டகத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து கொண்டிருந்தனர்.

போலீசார் ரோந்து

அப்போது கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி மற்றும் போலீசார் இரவு ரோந்து வந்தனர். அப்போது கச்சிராயன்பட்டி கூட்டுறவு வங்கி அருகே போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம கும்பல் கொள்ளையடிப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு அவசர, அவசரமாக வங்கியின் பின்பகுதி வழியாக வெளியேறி காட்டுப்பகுதிக்குள் ஓடினர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த சிலிண்டர், வெல்டிங் எந்திரங்கள் மற்றும் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.

கியாஸ் வெல்டிங் மூலம் லாக்கரில் ஓட்டை

வங்கியின் பின்பகுதியில் இருந்து சிலர் தப்பி செல்வதை பார்த்த போலீசார் அங்கு விரைந்து சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து போலீசார் வங்கிக்கு சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பியை அகற்றி கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வங்கியின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிவரை சென்று திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகை இருக்கும் லாக்கரை கியாஸ் வெல்டிங் மூலம் ஓட்டை போட்டுள்ளனர். போலீசாரை கண்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓடியது தெரியவந்தது. கொள்ளையர்கள் விட்டு சென்ற சிலிண்டர்கள், வெல்டிங் எந்திரங்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

நகைகள், பணம் தப்பின

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். போலீசார் ரோந்து வந்த காரணத்தால் கொள்ளையர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிறிதுநேரம் காலதாமதமாக போலீசார் அந்த பகுதிக்கு வந்திருந்தாலும் வங்கியில் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருக்கும். போலீசார் சரியான நேரத்தில் அங்கு ரோந்து வந்ததால் நகைகள், பணம் தப்பின.

வங்கிக்கு கொள்ளை கும்பல் வந்தபோது அப்போது இரவு நேர காவலாளியாக இருந்த வீரணன் வங்கியின் அருகே உள்ள வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்தபடவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கி செயலாளர் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டும் கொள்ளை முயற்சி

இந்த கச்சிராயன்பட்டி கூட்டுறவு வங்கியில் அடகு நகைகள் அனைத்தும் எந்தவித பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளது. இதே வங்கியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி நள்ளிரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3.20 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின. இந்த முறை சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் அதற்கான உபகரணங்களுடன் வந்து உள்ளனர். கடந்த முறை நடந்த கொள்ளை முயற்சிக்கு பின்னரும் வங்கி நிர்வாகம் சுதாரிக்க வில்லை. வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்குகூட நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே இனியாவது வங்கியில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story