பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை: 11 வீடுகள் இடிந்து விழுந்தன


பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை: 11 வீடுகள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 12 Oct 2017 3:45 AM IST (Updated: 12 Oct 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் 11 வீடுகள் இடிந்து விழுந்தன. தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்தியூர்-மைசூர் சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக நல்ல மழைபெய்து வருகிறது. பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பகலில் வழக்கம்போல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் பலத்த மழையாக மாறியது. காலை 7 மணி வரை மழை நீடித்தது. அதன்பின்னர் 8 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. அதன்பின்னர் நேற்று மாலை 4 மணிக்கு பலத்த மழையாக மாறியது. இந்த மழை 5 மணி வரை நீடித்தது.

பாலம் அரிப்பு

இதேபோல் துருசனாம்பாளையம், ஊசிமலை, தட்டக்கரை, மேற்கு மலைக்கிராமங்களான கொங்காடை, தாளக்கரை ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

துருசனாம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலம் கட்டுமான பணிக்காக வைத்திருந்த சிமெண்ட், கம்பி, ஜல்லி, ஜல்லி எந்திரம் மற்றும் கட்டுமான பொருட்களையும் வெள்ளம் அடித்து சென்றது. துருசனாம்பாளையம் அருகே ஊசிமலையில் உள்ள பழைய பாலத்தின் தடுப்புச்சுவர் மழை வெள்ளத்தில் இடிந்து விழுந்தது.

11 வீடுகள் இடிந்து விழுந்தன

மேலும் துருசனாம்பாளையம் பகுதியில் உள்ள 10 வீடுகளின் சுவர் மழையால் வலுவிழந்து இடிந்து விழுந்தது. அப்போது வீடுகளில் இருந்தவர்கள் உடனே வெளியே ஓடி வந்ததால் உயிர்தப்பினர். சித்தி என்பவரது வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், கட்டில், பீரோ, சிலிண்டர் ஆகியன வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதை அந்தப்பகுதி பொதுமக்கள் மீட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தாசில்தார் செல்லையா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இந்த மழையால் பெஜில்பாறை அரசு நடுநிலைப்பள்ளியை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் அங்கு சென்று மண்வெட்டி கொண்டு வெட்டி மழைவெள்ளத்தை வடியச்செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது. உடனே வீட்டில் இருந்த பெண் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்.

கார் இழுத்து செல்லப்பட்டது

பலத்த மழையால் அந்தியூர்-மைசூர் நெடுஞ்சாலையில் மழை வெள்ளத்தால் தார் ரோட்டின் ஒரு பகுதியில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ரோட்டின் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் சென்றன. இதற்கிடையே அந்தியூர்-மைசூர் நெடுஞ்சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மூங்கில் மரங்கள் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த வழியாக பஸ், கார், லாரி, வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் முற்றிலுமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து மலைக்கிராம மக்கள் அங்கு சென்று மரங்களை அப்புறப்படுத்தினார்கள். நேற்று காலை 8 மணி அளவில் போக்குவரத்து நிலமை சீரானது. அதன்பின்னர் அனைத்து வாகனங்களும் அந்த வழியாக புறப்பட்டு சென்றன. மழை வெள்ளத்தில் பர்கூர் மலைக்கிராமத்தில் குமரேசன் என்பவர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது. இந்த காரை பொதுமக்கள் உடனடியாக மீட்டனர்.

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. தொடர் மழையால் வரட்டுப்பள்ளம் அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவான 33.33 அடியை எட்டியது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரியில் சென்று கலந்து வருகிறது. இதனால் அந்த ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பவானி

பவானியில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நேற்று முன்தினம் இரவு பவானி கடைவீதியில் உள்ள வேலுசாமி என்பவரது டீக்கடையின் உட்புற கல் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று நள்ளிரவு இடி-மின்னலுடன் பலத்த மழைபெய்தது. இந்த மழையால் அம்மாபேட்டை பகுதி ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் சிங்கம்பேட்டையை அடுத்த சின்னமேட்டூர் பகுதியில் உள்ள பழனியம்மாள் என்பவரது ஓலை கொட்டகையை மின்னல் தாக்கியது. இதில் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் தீயை அணைக்க முடியவில்லை. இந்த தீ விபத்தில் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

Next Story