உடுமலையில் அரசு விடுதி தண்ணீர் தொட்டிக்குள் கல்லூரி மாணவி பிணம்


உடுமலையில் அரசு விடுதி தண்ணீர் தொட்டிக்குள் கல்லூரி மாணவி பிணம்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் கல்லூரி மாணவி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடுமலை,

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள கடலார் எஸ்டேட் கிழக்கு டிவிசனை சேர்ந்தவர் பாஸ்டியன். இவரது மகள் புஷ்பாஏஞ்சல் (வயது 19). இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி அதன் எதிரே உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் (சி.ஏ) 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த கல்லூரியில் சுழற்சி முறையில் 2 கட்டமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று மாணவி புஷ்பா ஏஞ்சலுடன் தங்கியிருந்த மாணவிகள் முதல் சுழற்சி வகுப்புக்கு சென்று விட்டனர். இதன் காரணமாக 2-வது சுழற்சிக்கு செல்லும் மாணவிகள் மட்டும் அந்த விடுதியில் தங்கியிருந்தனர்.

தண்ணீர் தொட்டிக்குள் மாணவி

இந்த நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவி துணியை காயப்போடுவதற்காக அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது விடுதி வளாகத்தின் ஒரு ஓரத்தில் இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மூடி திறந்து கிடப்பதை பார்த்தார். அத்துடன் அந்த தண்ணீர் தொட்டியின் அருகே மாணவிகள் அணியும் துப்பட்டா ஒன்றும் கிடந்தது. எப்போதும் மூடிய நிலையில் இருக்கும் தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததாலும், அருகில் துப்பட்டா கிடந்ததாலும் அந்த மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் அந்த தண்ணீர் தொட்டியின் அருகே சென்று பார்த்தார்.

அங்கு தண்ணீர் தொட்டிக்குள் மாணவி புஷ்பா ஏஞ்சல் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் கல்லூரி அருகே பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் விடுதி வளாகத்துக்கு ஓடி வந்து பார்த்தனர். அத்துடன் விடுதியில் தங்கியிருந்த மற்ற மாணவிகளும் அங்கு கூடினர். பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த மாணவி புஷ்பா ஏஞ்சலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பரிதாப சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாணவி புஷ்பாஏஞ்சல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மாணவி புஷ்பா ஏஞ்சல் காலை 9.30 மணிக்கு விடுதியில் சக மாணவிகளுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அதன் பின்னர்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதி வளாகத்தில் உள்ள அந்த தண்ணீர் தொட்டி எப்போதும் மூடியேதான் இருக்கும் என்றும், அதில் மாணவி தவறி விழுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பின்னர் மாணவி புஷ்பா ஏஞ்சல் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் பின்னரே மாணவியின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். மாணவி இறந்த சம்பவத்தால் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர். இதற்கிடையில் நேற்று மாலை மாணவி புஷ்பாஏஞ்சலின் பெற்றோரும் உடுமலைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச்செய்தது. 

Next Story