தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வை தாக்க முயற்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதரவாளர்கள் சாலைமறியல்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடியை உடைத்து அவரை தாக்க முயன்றவரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏழுமலை நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகே கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும், காரில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார்.
வெள்ளவேடு அருகே உட்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது திடீரென காரை வழிமறித்த மர்மநபர், உருட்டுக்கட்டையால் கார் கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி நொறுங்கியது. கண்ணாடி துகள் சிதறியதில் ஏழுமலையின் முகத்தில் சிறியஅளவில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த மர்மநபர் ஏழுமலையை தாக்க முயன்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் சத்தம் போட்டதால் மர்மநபர் தப்பிச்சென்று விட்டார்.
காயம் அடைந்த ஏழுமலைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஏழுமலையின் ஆதரவாளர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு, மர்மநபரை கைது செய்ய வலியுறுத்தினர். பின்னர் ஏழுமயின் ஆதரவாளர்கள் அரசு ஆஸ்பத்திரி எதிரே சாலையில் அமர்ந்து, ஏழுமலையின் கார் கண்ணாடியை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ சூப்பிரண்டு சிபி சக்கரவரத்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.