சாலைகளில் உள்ள குழிகளை மூடக்கோரி பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்துக்கு திடீர் பூட்டு


சாலைகளில் உள்ள குழிகளை மூடக்கோரி பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்துக்கு திடீர் பூட்டு
x
தினத்தந்தி 12 Oct 2017 4:45 AM IST (Updated: 12 Oct 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு நகரின் சாலைகளில் உள்ள குழிகளை மூடக்கோரி மாநகராட்சி அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு பா.ஜனதாவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் குண்டும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் சாலையில் உள்ள குழிகளால் ஏற்பட்ட விபத்துகளில் தம்பதி, பெண் என 3 பேர் இறந்தனர். மேலும், சிலர் காயங்கள் அடைந்தனர். இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் உள்ள குழிகளை உடனடியாக மூட வேண்டும் எனக்கூறி, அந்த பணியை முடிக்க 15 நாள் காலஅவகாசம் வழங்கி முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, சாலையில் உள்ள குழிகள் மூடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சாலைகளில் உள்ள குழிகளை உடனடியாக மூடக் கோரி நேற்று பா.ஜனதா கட்சியினர் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர், முதல்-மந்திரி சித்தராமையாவின் உருவப்பொம்மையை பாடை கட்டி தூக்கி வந்தனர். மேலும் அவர்கள் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அத்துடன், மாநகராட்சியின் பிரதான வாயிலில் உள்ள கதவுக்கு அவர்கள் பூட்டுபோட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் பேசுகையில், ‘முதல்-மந்திரி சித்தராமையா ஆரம்ப காலத்தில் இருந்தே நகரின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. கடந்த 40 நாட்களாக நகரில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத சித்தராமையா 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து குழிகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், இந்த பணிக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் அவர் கேட்டுள்ளார். காங்கிரஸ் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் செத்துபோய் விட்டதாக அவர் கூறட்டும், சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை நாங்களே மூடுகிறோம்‘ என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஷோபா எம்.பி. கூறுகையில், ‘பெங்களூரு நகரில் உள்ள சாலை பள்ளங்களை கண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாபம் விட்டு செல்கிறார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்தியஅரசு விடுவித்த ரூ.400 கோடி எங்கே சென்றது?. இந்த பணம் சித்தராமையா மற்றும் மந்திரி கே.ஜே.ஜார்ஜூக்கு சென்றுள்ளது‘ என்றார்.

இதேபோல், மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெங்களூரு மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி உள்பட பலர் பேசினர். இந்த போராட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த திடீர் போராட்டத்தால் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story