மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை


மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 51). அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 17 வயதில் மகள் இருந்தார். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். மகள் தனது தாயார் சுமதியுடன் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி ஆசிரியர் செல்வம், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அவரது மனைவி சுமதி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் செல்வத்தை கைது செய்தனர். இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் செல்வத்துக்கு, மானபங்கம் செய்த பிரிவுக்கு ஒரு ஆண்டு, மிரட்டல் விடுத்த பிரிவுக்கு ஒரு ஆண்டு, கற்பழிப்புக்கு ஆயுள் தண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3 பிரிவுகளுக்கு ஒரு பிரிவுக்கு ஆயுள் தண்டனை, மற்றொரு பிரிவுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, இன்னொரு பிரிவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 38 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இதனால் ஆசிரியர் செல்வம் ஒரு ஆயுள் தண்டனை காலம் மட்டும் சிறையில் இருப்பார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் செல்வம், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். அவரை கூலிப்படையினரை ஏவி, கொலை செய்ததாக தந்தை செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையும் நாமக்கல் கோர்ட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story