வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கின


வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கின
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கின.

ஸ்ரீரங்கம்,

திருச்சி ஓயாமரி சுடுகாடு சாலையில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகமும், திருவானைக்காவல் மெயின்ரோட்டில் கொள்ளிடம் பாலம் அருகே ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகமும் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று பகல் திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சேவியர்ராணி, பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். பகல் 1.30 மணி முதல் இரவு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் அலுவலகத்தில் ஜன்னலுக்கு வெளியே கட்டுக்கட்டாக கிடந்த கணக்கில் வராத பணம் மற்றும் அலுவலகத்துக்குள் ஆங்காங்கே சிதறி கிடந்த பணம் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதில் ரூ.80 ஆயிரம் சிக்கின. இதேபோல் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் சிக்கின. மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.

சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “பொதுமக்களின் தொடர் புகார் எதிரொலியாக இந்த சோதனையை நடத்தி உள்ளோம். இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணத்தை கோர்ட்டில் ஒப்படைத்து விடுவோம். இது தொடர்பாக அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களை கோர்ட்டில் சமர்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம். இதுபோன்ற சோதனை அவ்வப்போது தொடர்ந்து நடத்தப்படும்”என்றார்.

இந்த சோதனை தொடர்பாக புரோக்கர்கள் 5 பேர் மற்றும் ஊழியர்கள் 2 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story