கோவில்பட்டியில் மினி பஸ்கள் வேலைநிறுத்தம்


கோவில்பட்டியில் மினி பஸ்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:15 AM IST (Updated: 12 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மினி பஸ்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல, 29 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பஸ் நிலையத்தின் கிழக்கு, மேற்கு பகுதியில் மினி பஸ்கள் சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன. இந்த நிலையில் மினி பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி, அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் மினி பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்லுமாறு நகரசபை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அங்கு மினி பஸ்களை நிறுத்தினால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று கூறி, மினி பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அவதி

இதனால் கோவில்பட்டியில் உள்ள அனைத்து மினி பஸ்களும், கோவில்பட்டி– கடலையூர் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் துணிகள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க முடியாமல், சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.


Related Tags :
Next Story