சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி சென்ற வாலிபர் கைது


சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி சென்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2017 10:15 PM GMT (Updated: 11 Oct 2017 10:03 PM GMT)

நாகர்கோவில் சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி சென்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் மீது குமரி, நெல்லை மாவட்டங்களிலும், மும்பையிலும் திருட்டு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை மும்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது இவருக்கும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகினர்.

அதைத் தொடர்ந்து 2 பேரும் சேர்ந்த சதி திட்டம் தீட்டி மும்பை சிறையில் இருந்து தப்பித்து குமரி மாவட்டத்துக்கு வந்தார்கள்.

 குமரி மாவட்டத்தில் வங்கிகளில் கொள்ளை முயற்சி, வீடுகளில் திருட்டு உள்ளிட்ட பல சம்பவங்களில் ஈடுபட்ட இவர்களை கோட்டார் போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு நெல்லை மாவட்டத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக 2 பேரையும் நெல்லை போலீசார் அழைத்து சென்றனர்.

விசாரணை முடிந்ததும் மீண்டும் நாகர்கோவில் சிறைக்கு போலீசார் அழைத்து வந்தபோது, 2 பேரும் நாகர்கோவில் சிறை வாசலில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

 போலீசார் பல இடங்களில் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கடந்த 5–ந்தேதி குழித்துறை பகுதியில் மணிகண்டனும், டேவிட்டும் நின்றுகொண்டு இருந்ததை போலீசார் பார்த்தனர்.

உடனே அவர்களை பிடிக்க விரட்டி சென்றனர். மணிகண்டன் போலீசாரிடம் சிக்கினார். ஆனால் டேவிட்டை பிடிக்க முடியவில்லை. அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து மணிகண்டனை பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இதற்கான அனுமதி கோரி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கோட்டார் போலீசார் மணிகண்டனை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து அதற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story