டெங்கு, வைரஸ் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்


டெங்கு, வைரஸ் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2017 2:00 PM IST (Updated: 12 Oct 2017 11:27 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் கோபி வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த பின்பு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோத பண பரிமாற்றம் மூலம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ஒரே ஆண்டில் 16,000 மடங்கு உயர்ந்துஉள்ளது. இந்த ஊழல் குறித்து மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். அப்போது மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குளிப்பதற்கு மக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரக்கேடு காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து விரைவில் மக்களை திரட்டி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, சாயல்குடி வேலுச்சாமி, ராமேசுவரம் பாரிராஜன், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், காருகுடி சேகர், பரமக்குடி அகமது கபீர், காஜா, ஆர்ட் கணேசன், எஸ்.சி. பிரிவு தலைவர் சரவண காந்தி, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், மகளிர் காங்கிரஸ் சகுந்தலா, முனீசுவரி, கோபால் உள்பட வட்டார தலைவர்கள், அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story