டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மண்டல அலுவலர்கள் நியமனம் கலெக்டர் லதா தகவல்


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மண்டல அலுவலர்கள் நியமனம் கலெக்டர் லதா தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2017 3:00 PM IST (Updated: 12 Oct 2017 11:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டத்தை 15 பகுதியாக பிரித்து மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் லதா கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் உதவி கலெக்டர் அளவிலான அதிகாரிகள் மண்டல கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் பொது சுகாதார துறையினருடன் இணைந்து ஒட்டுமொத்த டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இத்துடன் அவர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் முழு கண்காணிப்புடன் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளான ஒட்டுமொத்த துப்புரவு பணிகள், காய்ச்சல் ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் நலக்கல்வி, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல், புகைமருந்து அடிக்கும் எந்திரங்களின் செயல்பாடுகள், அபேட் மருந்து, கிருமிநாசினி இருப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு கண்காணித்தல் ஆகிய ஒருங்கிணைப்பு பணிகளை மண்டல அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.

மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் பெயர் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதி விவரம் வருமாறு:-

தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜீத்-காரைக்குடி நகராட்சி, கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி-சிவகங்கை நகராட்சி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரங்கராஜ்-திருப்புவனம் ஒன்றியம், உதவி ஆணையாளர்(ஆயம்) சுப்பையா-தேவகோட்டை ஒன்றியம், தனித்துணை ஆட்சியர் விஜயன்-திருப்பத்தூர் ஒன்றியம், சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் புஷ்பாதேவி-மானாமதுரை ஒன்றியம், இ.ஐ.டி. பாரி நிறுவன துணை ஆட்சியர் கண்ணபிரான்-சிவகங்கை ஒன்றியம், மாவட்ட ஊராட்சி செயலாளர் மகாலட்சுமி-கல்லல் ஒன்றியம், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரங்கசாமி-சாக்கோட்டை ஒன்றியம், மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா-சிங்கம்புணரி ஒன்றியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) செல்லக்கண்ணு-இளையான்குடி ஒன்றியம், மாவட்ட மேலாளர்(தாட்கோ) சட்டநாதன்-எஸ்.புதூர் ஒன்றியம், உதவித் திட்ட அலுவலர் தங்கராஜ்-காளையார்கோவில் ஒன்றியம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் புகழேந்தி-கண்ணங்குடி ஒன்றியம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) நாராயணன்-தேவகோட்டை நகராட்சியிலும் மண்டல அலுவலர்களாக பணியாற்றுவர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story