ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு தடகள இளம் வீராங்கனை- சிறுவன் பலி


ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு தடகள இளம் வீராங்கனை- சிறுவன் பலி
x
தினத்தந்தி 12 Oct 2017 11:54 AM IST (Updated: 12 Oct 2017 11:54 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலால் தடகள இளம்வீராங்கனை மற்றும் ஒரு சிறுவன் பலியாகினர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகம் நடத்தி வருபவர் பால முருகன்(வயது 35). இவருடைய மனைவி முனீசுவரி(30). இவர்களின் மூத்த மகன் அஜித்குமார் (12). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தான். சிறுவன் அஜித்குமாருக்கு கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவனுக்கு உடல்நிலை கவலைக் கிடமானதை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அஜித்குமார் பரிதாபமாக இறந்து போனான். இதனால் ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது. சிறுவனின் உடலை வாங்க மறுத்து அவனுடைய உறவினர்கள் நேற்று காலை ஆஸ்பத்திரி வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் கூறும்போது, சிறுவன் அஜித் குமாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும்போதே சுய நினைவு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் தான் அனுமதித்தோம். ஏற்கனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அரசு சார்பில் உரிய அறிவுரை வழங்கியுள்ளோம்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியிருக்கிறோம். அப்படியிருந்தும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் சரியான சிகிச்சை அளிக்காமல் நிலைமை கவலைக்கிடமானதும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நிலை தொடருகிறது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். சிறுவனுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி மற்றும் நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளிகள் குறித்தும் சுகாதாரத்துறையினர் மூலம் நேரடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு பாதிப்பு என சந்தேகம் வந்தால் நேரடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோல் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த ஏக்நாத் என்பவரின் மகள் ஹர்சவர்த்தினி(11) என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி ஹர்சவர்த்தினி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானதாக அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். மாணவி ஹர்சவர்த்தினி ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தடகள இளம் வீராங்கனையான மாணவி ஹர்சவர்த்தினி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவி ஹர்சவர்த்தினியின் தந்தை ஏக்நாத் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கேன்டீன் வைத்து நடத்தி வருகிறார். மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பேர் பலியாகி இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரனிடம் கேட்டபோது, கடந்த சில நாட்களாகவே மூச்சிறைப்பு மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு மாற்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சல் அதிகமாகி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பலியாகி உள்ளார்.

மாணவியின் இறப்பிற்கு டெங்கு காய்ச்சல் தான் காரணமா என்பது குறித்து இன்னும் அறிக்கை வரவில்லை. அந்த அறிக்கை வந்தபின்னரே டெங்கு காய்ச்சல்தானா என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்று கூறினார்.

Next Story