திண்டுக்கல், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


திண்டுக்கல், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 12 Oct 2017 12:35 PM IST (Updated: 12 Oct 2017 12:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தல், உரிமத்தை புதுப்பித்தல், புதிய வாகனங்களை பதிவு செய்தல் போன்றவற்றுக்காக நேற்று ஏராளமானோர் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று அதற்கான கட்டணம் செலுத்தியபடி இருந்தனர். அதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வாகன பரிசோதனை மைதானத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

அங்கு வாகனங்களுக்கு உறுதிச்சான்று வாங்கவும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும் வாகனங்களை ஓட்டி காண்பித்து கொண்டு இருந்தனர். இதற்கிடையே மதியம் 1 மணி அளவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மைதானத்தில் 2 கார்கள் வந்து நின்றன. அதில் இருந்து இறங்கியவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மைதானம் ஆகியவற்றின் நுழைவு வாயிலை பூட்டினர்.

பின்னர் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் என்றும், சோதனை நடத்த வந்து இருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன்பின்னரே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபாகீதாராணி மற்றும் 10 போலீசார் சோதனை நடத்த வந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அங்கு இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகன பரிசோதனை மைதானத்தில் நின்ற அனைவரிடமும், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளையும், போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு நபராக வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றிலும் போலீசார் நின்றபடி கண்காணித்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்கும் இடம், கட்டணம் செலுத்துமிடம், ஆவண காப்பக அறை, வாகன பரிசோதனை மைதானத்தின் அறை, அங்கு நின்ற வாகனங்கள் ஆகியவற்றில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த பணத்தை கைப்பற்றி, நேற்றைய தினம் வசூலான கட்டணமா? என்று ஆய்வு செய்தனர்.

இதற்காக வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களை சரிபார்த்தனர். இந்த சோதனையின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் அலுவலகத்தில் இல்லை. அவர் விடுப்பில் சென்றுவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7 மணி வரை நடந்தது. இறுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 405 சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம், வாகன பரிசோதனை மைதானத்தில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்து உள்ளது. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

அலுவலகத்தில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் அமரஜோதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்த 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அலுவலகத்தில் ஆவணங்களை சரி பார்த்தனர். இதில் கணக்கில் வராத பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு 9 மணி வரை இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 215-ஐ போலீசார் கைப்பற்றினர்.

கணக்கில் வராத இந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா? என்று மோட்டார் வாகன ஆய்வாளரிடமும், கண்காணிப்பாளரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தமபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story