டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆலங்குளத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குளம்,
ஆலங்குளத்தில் புதுப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடை விளை நிலங்களுக்கு அருகில் இருப்பதுடன், பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆலங்குளத்திற்கு செல்லும் சாலையில் இருப்பதாலும் இந்த கடை திறக்கப்பட்டது முதல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த கடையை அகற்ற வலியுறுத்தி, கடந்த 20–ந் தேதி ஆலங்குளத்திற்கு பீடித் தொழிலாளர் நல மருத்துவமனையை திறக்க வந்த நெல்லை எம்.பி. பிரபாகரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர், 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்து சென்றார்.
ஆனாலும், அந்த கடை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து நேற்று காலையில் 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சென்று டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தாசில்தார் சுப்புராயலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக டாஸ்மாக் மண்டல மேலாளர் தான் முடிவு எடுக்க முடியும், தற்காலிகமாக இன்று(நேற்று) ஒருநாள் மட்டும் கடையை அடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று கடை திறக்கப்படவில்லை. தொடர்ந்து பொதுமக்கள் கடை முன்பு குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 7 மணி வரை டாஸ்மாக் மண்டல மேலாளர் அப்பகுதிக்கு வரவில்லை. அவசர பணி நிமித்தமாக அவரால் வர இயலவில்லை என்றும், இன்று(வெள்ளிக்கிழமை) அவர் வந்தவுடன் இந்த கடை குறித்து உரிய முடிவு எடுக்கப்படும், என தாசில்தார் தெரிவித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.