டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு சிறுமிகள் உள்பட மேலும் 6 பேர் பலி


டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு சிறுமிகள் உள்பட மேலும் 6 பேர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு 4 சிறுமிகள் உள்பட மேலும் 6 பேர் பலியானார்கள்.

சேலம்,

தமிழகத்தில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூட்டாத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் கீர்த்தி (வயது 8), அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி கடந்த 7-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். நேற்று காலை சிறுமி கீர்த்தி திடீரென சிகிச்சை பலனின்றி இறந்தாள்.

இதேபோல, சேலம் அருகே நாக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் இலக்கியா (6). கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து சிறுமியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை சிறுமி இலக்கியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகள் அபிநயா (9). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி அபிநயா நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென உயிரிழந்தாள்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் - ராசிபுரம் மெயின் ரோடு அருகே வசித்து வருபவர் கதிரேசன். மரம் அறுப்பு ஆலை வைத்து உள்ளார். இவருடைய மகன் சபரிராஜன் (15). புதன்சந்தை அருகே தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சபரிநாதன் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தான்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தான்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுராமன். கொத்தனார். இவருடைய மகள் மதுமதி (19). தஞ்சையில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சி.ஏ. ஆடிட்டிங் பயிற்சி பெற்று வந்த மதுமதிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது. அதையடுத்து அவரை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவி மதுமதி நேற்று பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு சென்னிமலைபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி பரிமளா. இவர்களுடைய மூத்த மகள் மாரியம்மாள் (12). வெள்ளோடு பெருமாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாரியம்மாள் பரிதாபமாக இறந்தாள்.


Related Tags :
Next Story