காதலை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை


காதலை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2017 4:45 AM IST (Updated: 13 Oct 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

காதலை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

உடுமலை,

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள கடலாறு எஸ்டேட் கிழக்கு டிவிசனை சேர்ந்தவர் பாஸ்டின். இவருடைய மகள் புஷ்பா ஏஞ்சல் (வயது 19). இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதியில் தங்கி இருந்து, அதன் எதிரே உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதி வளாகத்தில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் புஷ்பா ஏஞ்சல் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்தும் உடுமலை போலீசார் விரைந்து சென்று மாணவி புஷ்பா ஏஞ்சல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து மாணவியின் தந்தை பாஸ்டின் உடுமலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

புஷ்பா ஏஞ்சல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூணாறை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததார். அதை நானும், எனது மனைவியும் கண்டித்து அறிவுரை கூறினோம். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி ஊருக்கு வந்த புஷ்பா ஏஞ்சல் பின்னர் 9-ந்தேதி மீண்டும் விடுதிக்கு திரும்பி சென்றார். அதன்பின்னர் செல்போன் மூலம் தனக்கு மனசு சரியில்லை என்று என்னிடம் கூறினார்.

அப்போது நான் ஆறுதல் கூறினேன். இந்த நிலையில் புஷ்பா ஏஞ்சல் தான் காதலித்தவரை எண்ணி மனவருத்தத்தால் மனமுடைந்து அவர் தங்கி இருந்த விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர், உடலை அடக்கம் செய்ய மூணாறுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story