சென்னை புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரேநாளில் 5 பேர் பலி


சென்னை புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரேநாளில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2017 3:30 AM IST (Updated: 13 Oct 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் இறந்தனர்.

ஆலந்தூர்,

டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலர் பலியாகி வருகிறார்கள். சென்னையை அடுத்த பரங்கிமலையை சேர்ந்தவர் தாமஸ் (வயது 60). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர், கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி தாமஸ் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் பள்ளிக்கரணை ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி விஜயகுமாரி (28) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி விஜயகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவன் பலி

புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ்.முத்து நகரைச் சேர்ந்த ரமணய்யா என்பவரது மகன் வெங்கட்பாலாஜி (10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். டெங்கு காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த வெங்கட்பாலாஜியை கடந்த 9-ந்தேதி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை மாணவன் உயிரிழந்தான்.

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டைச் சேர்ந்த வேம்புலி என்பவரது மகள் கோமதி (22) டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இதேபோல் ஆவடி காமராஜ்நகர் புதுநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி பிரியா (24) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவருக்கு, நள்ளிரவில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

Next Story