டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் சாவு


டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2017 4:15 AM IST (Updated: 13 Oct 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.

ஈரோடு,

சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு சென்னிமலைபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி பரிமளா. இவர்களுடைய மூத்த மகள் மாரியம்மாள் (வயது 12). வெள்ளோடு பெருமாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மாரியம்மாளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெற்றோர் மாரியம்மாளை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து 4 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து மாரியம்மாளின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தபோது அவளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

சிறுமி பலி

அதன்பின்னர் மாரியம்மாள் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு அவளது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து அவளை மீண்டும் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சென்னிமலை ஒன்றிய பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட சுகாதாரத்துறை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு சென்னிமலை ஒன்றிய பகுதியில் முதன் முதலில் பள்ளி மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களாகிய நாங்கள் அனைவரும் பீதியில் உள்ளோம்’ என்றனர்.

மற்றொரு சிறுமியும் சாவு

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு சிறுமி பலியானார். அதன்விவரம் வருமாறு:-

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி புதுக்காலனியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 35). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு கலைச்செல்வி (6), ரச்சனா (5) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கலைச்செல்வி முதல் வகுப்பும், ரச்சனா யு.கே.ஜி.யும் படித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரச்சனாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பெற்றோர் ரச்சனாவை புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாள். அப்போது ரச்சனாவை டாக்டர்கள் சோதனை செய்தபோது அவளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ரச்சனா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். டாக்டர்கள் அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரச்சனா பரிதாபமாக இறந்தாள். 

Related Tags :
Next Story