அம்பத்தூரில் 2 ஸ்டூடியோ கடைகளில் கேமரா-பணம் திருட்டு


அம்பத்தூரில் 2 ஸ்டூடியோ கடைகளில் கேமரா-பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Oct 2017 4:15 AM IST (Updated: 13 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் 2 ஸ்டூடியோ கடைகளின் பூட்டை உடைத்து கேமரா, பணம் திருட்டு போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்பத்தூர்,

அம்பத்தூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 42). இவர், அதே பகுதியில் செங்குன்றம் சாலையில் ஸ்டூடியோ கடை வைத்து உள்ளார். இதன் அருகே அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(45) என்பவருக்கு சொந்தமான மற்றொரு ஸ்டூடியோ கடை உள்ளது.

இவர்களின் கடைகளுக்கு அருகில் அடுத்தடுத்து மருந்து கடை மற்றும் ஒரு துணி கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு அனைவரும் வியாபாரம் முடிந்து கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

கேமரா-பணம் திருட்டு

நேற்று காலை வந்து பார்த்த போது அடுத்தடுத்து உள்ள 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் 2 ஸ்டூடியோ கடைகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

மருந்து கடை மற்றும் துணி கடையின் ஒரு பக்கம் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஷட்டரின் நடுவில் இருந்த பூட்டுகளை மர்மநபர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் அந்த 2 கடைகளிலும் திருட்டு போகவில்லை.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். துணிக்கடையின் வெளி பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கையில் சிறிய கடப்பாரையுடன் வந்து ஒவ்வொரு கடையின் பூட்டுகளையும் உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து மர்ம வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தற்போது திருட்டு நடைபெற்ற 2 ஸ்டூடியோ கடைகளிலும் கடந்த ஆண்டும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. 

Next Story