ஷெனாய்நகர் திரு.வி.க. காலனியில் சுரங்கத்தில் மெட்ரோ ரெயில் ஓடுவதால் 28 வீடுகளில் விரிசல்


ஷெனாய்நகர் திரு.வி.க. காலனியில் சுரங்கத்தில் மெட்ரோ ரெயில் ஓடுவதால் 28 வீடுகளில் விரிசல்
x
தினத்தந்தி 12 Oct 2017 11:30 PM GMT (Updated: 12 Oct 2017 9:59 PM GMT)

சென்னை, ஷெனாய் நகர் திரு.வி.க. காலனியில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் ஓடுவதால் 28 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் நேரு பூங்கா முதல் திருமங்கலம் வரை 7.40 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் கடந்த மே 14-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப்பாதையில் உள்ள ஷெனாய்நகரில் சுரங்கப்பாதை தோண்டும்போது அப்பகுதியில் உள்ள மருந்து கடை மற்றும் வீடுகள் திடீரென்று பூமிக்குள் சுமார் 3 அடி இறங்கியது. உடனடியாக மெட்ரோ ரெயில் நிறுவனத்தினர் அங்கு சென்று கட்டிடத்தை சரிசெய்து கொடுத்தனர்.

தற்போது ஷெனாய்நகரில் உள்ள திரு.வி.க. காலனியில் 1970-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட 28 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் ரெயில் ஓடும்போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் ஏற்கனவே மெட்ரோ ரெயில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

28 வீடுகள் பாதிப்பு

இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள 28 வீடுகளில் சுவர்கள், மாடிப்படிகள், சமையல் அறைகள், தரைதளம் போன்றவை விரிசல் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் இருந்து தண்ணீரும் பீய்ச்சிக் கொண்டு வெளியேறி உள்ளது. இதனால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திரு.வி.க. காலனி குடியிருப்போர் சங்க செயலாளர் செந்தில்நாதன் கூறியதாவது:-

ஷெனாய் நகர் வழியாக சுரங்கத்தில் மெட்ரோ ரெயில் ஓடுவதால் எங்கள் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும் வந்துபார்த்து புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஐ.ஐ.டி.யை சேர்ந்த சுரங்க நிபுணர்களும் பார்த்துச் சென்றுள்ளனர்.

அதிர்வு

நாளுக்கு நாள் வீடுகளில் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இங்கு வசிப்பதற்கே அச்சமாக உள்ளது. அதுவும் இங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இரவு 10 மணி அளவில் சுரங்கத்தில் ரெயில் ஓடுவதால் ஏற்படும் அதிர்வு வீடுகளில் தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு நன்றாக தெரிகிறது. இதனை மெட்ரோ ரெயில் நிறுவனம் உடனடியாக சரிசெய்து தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்பகுதியில் வசிக்கும் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.ஐ.டி. யில் பணியாற்றும் சுரங்க நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் ரெயில் ஓடும்போது ஆய்வு செய்ததில் எந்த அதிர்வும் ஏற்படவில்லை. இருப்பினும் மெட்ரோ ரெயில் பணியால் தான் விரிசல் ஏற்படுகிறது என்று தெரியவந்தால் அதனை சரிசெய்து தர மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாராக இருக்கிறது.

இதுதொடர்பான ஆய்வு அறிக்கை ஐ.ஐ.டி.யில் இருந்து இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

Next Story