குப்பைகள் அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் மெத்தனம் பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு


குப்பைகள் அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் மெத்தனம் பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2017 12:00 AM GMT (Updated: 12 Oct 2017 10:03 PM GMT)

சென்னையில் குப்பைகளை அள்ளுவதில் துப்புரவு பணியாளர்கள் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார்கள். என்று சென்னை மாநகராட்சி மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி உணவு, தாவர, மர, நுகரப்பட்ட பிளாஸ்டிக், இரும்பு-உலோகங்கள், கந்தைகள்-துணிகள், காகிதங்கள், ரப்பர் மற்றும் தோல் பொருட்கள், கற்கூளங்கள் உள்ளிட்ட கழிவுகள் தினந்தோறும் துப்புரவு ஊழியர்களால் பெறப்படுவது வழக்கம்.

தினசரி குப்பை மாற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவு 4 ஆயிரம் டன் ஆகும்.

நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் என அனைத்தும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 751 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

குற்றச்சாட்டு

தினந்தோறும் காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும் குப்பைகள் பெறப்படுகின்றன.

கடந்த 2-ந்தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மட்டும் மக்காத குப்பைகளையும், பிற நாட்களில் மட்கும் குப்பைகளையும் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு இருப்பதாகவும், குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சத்து 87 ஆயிரத்து 219 கிலோ மக்காத குப்பைகள் பெறப்பட்டதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால் குப்பைகள் அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பணியாளர்கள் மெத்தனம்

“கடந்த சில மாதங்களாகவே நகரின் பெரும்பாலான இடங்களில் தினசரி குப்பைகள் அகற்றப்படுவது கிடையாது. தினமும் குப்பை வண்டிகள் வரும் என்று, வீட்டு வாசலில் குப்பை கூடைகள் காத்திருக்கின்றன. ஆனால் குவிந்திருக்கும் குப்பைகளை தேடி கொசுக்கள் தான் வருகின்றதே தவிர, துப்புரவு பணியாளர்கள் வருவது கிடையாது. வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே காலையில் அதுவும் 8 மணிக்கு மேல் தான் குப்பை வண்டிகள் வருகிறார்கள். ‘விசில்’ அடித்து வருவதால் தான் குப்பை வண்டிகள் வருவதே தெரிகின்றது.

அவர்களிடம் ‘ஏன் தினமும் வருவதில்லை?’, என்று கேட்டால் போதும், சண்டைக்கு வருகிறார்கள். சிலர், ‘போய் அதிகாரிகிட்ட புகார் சொல்லுங்க... வண்டி இருந்தாதான் வரமுடியும்... சும்மா பேசாதீங்க...’, என்று வெறுப்பாகவும், மெத்தனமாகவும் பதில் தருகிறார்கள். சில பெண் ஊழியர்கள் கோபத்தில் குப்பைகளை பெறாமலேயே வீம்புடன் சென்றுவிடுகிறார்கள்.

வரி செலுத்துவது எதற்கு?

தற்போது டெங்கு காய்ச்சல் விவகாரம் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் வளர விடக்கூடாது என்று விழிப்புணர்வு செய்து வரும் மாநகராட்சி, அக்கொசுக்கள் சேர காரணமாக இருக்கும் குப்பைகளை முறையாக பெறாதது ஏன்? என்று சிந்திப்பது கிடையாது. பல வீடுகளில் தென்னை மட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. அதனை அகற்றவோ, அதன்மீது மருந்து தெளிக்கும் பணிகளோ நடப்பது இல்லை.

எனவே முதலில் மூல ஆதாரமான குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முறைப்படுத்த வேண்டும். குப்பைகளை தினசரி அள்ள துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். அதேவேளையில் டெங்கு ஒழிப்பு பணிகளிலும் தீவிரம் காட்டி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அது இல்லாவிட்டால் மாநகராட்சி எதற்கு, இத்தனை காலம் வரி செலுத்துவதும் எதற்கு?”

மேற்கண்டவாறு இல்லத்தரசிகள் கொந்தளிப்புடனே புகார் அளிக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு

சென்னையில் பெரும்பாலான இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும், கொசு பரவ காரணமான மூலப்பொருட்களை அகற்றும் பணிகளும் முறையாக நடக்கவில்லை. குறிப்பாக பெரம்பூர், புளியந்தோப்பு, அமைந்தகரை, திருமங்கலம் திருவல்லீஸ்வரர் நகர், எழும்பூர், புரசைவாக்கம், சூளைமேடு, அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி மற்றும் தண்டையார்ப்பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் இதே புகார்கள் தான் எழுகின்றன.

எனவே குப்பைகள் பெறும் பணிகளில் பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தும் பட்சத்தில் பொதுமக்களிடம் இருந்து கெட்டபெயர் வாங்கும் சூழ்நிலை மாநகராட்சிக்கு ஏற்படாது. இதில் மாநகராட்சி கமிஷனர் தனி கவனம் செலுத்தி அந்தந்த மண்டல அதிகாரி மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகளை அறிவுறுத்தவேண்டும். எப்படி சொத்துவரி மற்றும் தொழில் வரி வசூலிப்பதில் அக்கறை செலுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ, அதுபோல இந்த விஷயத்திலும் மாநகராட்சி அக்கறை செலுத்தவேண்டும் என்பதே ஒட்டுமொத்த சென்னை நகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பு. 

Next Story