சக்கரேபைலு முகாமில் கிரிக்கெட், கால்பந்து விளையாடி அசத்திய ‘கும்கி’ யானைகள்
சக்கரேபைலு முகாமில் கிரிக்கெட், கால்பந்து விளையாடி ‘கும்கி’ யானைகள் அசத்தின. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர்.
சிவமொக்கா,
சிவமொக்காவில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் சக்கரேபைலு யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு 22 கும்கி யானைகள் உள்ளது. இந்த முகாமில், அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து வந்து, ‘கும்கி’யாக மாற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் வார விழாவையொட்டி யானைகளை உற்சாகப்படுத்தும் விதமாக ‘யானைகள் விழா’ என்னும் பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேப் போல் இந்த ஆண்டு வனவிலங்குகள் வார விழாவையொட்டி நேற்று சக்கரேபைலு முகாமில் உள்ள யானைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆலே, சூர்யா, சாகர், கங்கை, இந்திரா, கபிலா ஆகிய 6 யானைகள் மட்டுமே கலந்துகொண்டன. மற்ற யானைகள் உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர்
6 யானைகளுடன், பானுமதி என்ற யானையின் 1½ மாதமே ஆன குட்டி பெண் யானையும் கலந்துகொண்டது. முதலில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. யானைகள் கால்பந்து, கிரிக்கெட் விளையாடியதை அங்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர்.
கால்பந்து விளையாடிய ஒரு யானை காலால் உதைத்த பந்து, சுற்றுலா பயணிகள் மீது விழுந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் கைத்தட்டியும், விசில் அடித்தும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இதேப் போல் யானைகள் கிரிக்கெட் விளையாடியதையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். மேலும் விளையாட்டு போட்டிகளில் விளையாடி அசத்திய யானைகளை கண்டு சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்தனர்.
விளையாட்டு போட்டியின் போது யானைகளுடன் குட்டி யானையும் அங்குமிங்கும் ஓடி பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது. அத்துடன் குட்டியானை பெரிய யானைகளை விளையாட விடாமல் குறுக்காக ஓடி சேட்டையும் செய்தது. இதை பார்த்து குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மந்திரி காகோடு திம்மப்பா
முன்னதாக முகாம் அருகில் ஓடும் துங்கா ஆற்றில் 6 யானைகளும், குட்டி யானையும் குளிப்பாட்டி அலங்கரித்து வரப்பட்டன. பின்னர் 6 யானைகளும் அணிவகுத்து நின்றன. அவற்றுக்கு மாநில வருவாய்த் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான காகோடு திம்மப்பா கரும்பு, வெல்லம், உணவு பொருட்களை கொடுத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரசன்ன குமார், கிம்மனே ரத்னாகர், வனத்துறை அதிகாரி செலுவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story