தொடர் கனமழை காரணமாக நிரம்பியது சிக்கஹோலே அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


தொடர் கனமழை காரணமாக நிரம்பியது சிக்கஹோலே அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 13 Oct 2017 4:14 AM IST (Updated: 13 Oct 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழை காரணமாக நிரம்பிய சிக்கஹோலே அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொள்ளேகால், 

சாம்ராஜ்நகர் அருகே சிக்கஹோலே அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சித்தய்யனபுரா, உங்கலவாடி, கும்பேஸ்வரா காலனி, சந்தகவாடி, ஆலூர் வழியாக எலந்தூர், கொள்ளேகால் வரை செல்கிறது. இந்த அணையின் கீழ் 3,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் சிக்கஹோலே அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

இதனால் விவசாயிகளும், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த அணை கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு நிரம்பியது. அதன்பிறகு அணை நிரம்பாமல் இருந்து வந்தது. இதன்காரணமாக அந்தப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியது.

அணை நிரம்பியது

இந்த நிலையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சிக்கஹோலே அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக நேற்று முன்தினம் சிக்கஹோலே அணை முழுவதுமாக நிரம்பியது. இந்த அணை 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிரம்பி உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,474 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 2,473 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு உள்ளே வரும் தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

தண்ணீர் திறப்பு

சிக்கஹோலே அணை நிரம்பி உள்ளதால், அந்த அணைக்கு நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராமசந்திரா, புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ., காடா தலைவர் நஞ்சப்பா ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையடுத்து அந்த அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதன்மூலம் அந்த அணையை நம்பியுள்ள 3,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் விவசாய பணிகளையும் தொடங்கி உள்ளனர். 

Next Story