பெங்களூருவில் சாலைகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடி நிதி எங்கே போனது? -எடியூரப்பா கேள்வி


பெங்களூருவில் சாலைகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடி நிதி எங்கே போனது? -எடியூரப்பா கேள்வி
x
தினத்தந்தி 13 Oct 2017 4:17 AM IST (Updated: 13 Oct 2017 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சாலைகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடி நிதி எங்கே போனது? என்று எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால், சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் உள்ள குழிகளை 15 நாட்களில் மூடும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியின் தலைவர்கள் நேற்று பெங்களூருவில் சேதம் அடைந்துள்ள சாலைகளை நேரில் பார்வையிட்டனர். ஜே.சி.நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர்கள், நந்திதுர்கா ரோடு, ஜெயமஹால் ரோடு, சிவாஜிநகர், அல்சூர், சாந்திநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பழுதான சாலைகளை நேரில் பார்வையிட்டனர்.

எதிர்ப்பை தெரிவித்தனர்

கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே சாலையில் உள்ள குழியில், எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் செடியை நட்டு நூதன முறையில் பெங்களூரு மாநகராட்சிக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு நகர வரலாற்றில் சாலைகள் இந்த அளவுக்கு மோசமாக இருந்தது இல்லை. இந்த சாலைகள் மோசமாக இருப்பதற்கு ஆளும் காங்கிரஸ் அரசின் மோசமான ஆட்சி நிர்வாகமே காரணம். சாலைகளை மேம்படுத்துவதாக கூறி பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்து உள்ளது. சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டதாக இந்த அரசு சொல்கிறது. அந்த பணம் எங்கே போனது?.

சித்தராமையாவுக்கு கோபம்

நகரில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் 16 ஆயிரம் குழிகள் சாலைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவுக்கு சாலைகள் சேதம் அடைய யார் காரணம்?. சித்தராமையா எந்த ரீதியில் வளர்ச்சியை செய்துள்ளார் என்பதற்கு பழுதாகியுள்ள சாலைகளே எடுத்துக் காட்டுகிறது.

எதிர்க்கட்சிகள் தேவை இல்லாமல் குற்றம்சாட்டுவதாக சித்தராமையா சொல்கிறார். சாலைகள் எவ்வளவு மோசமாக பழுதாகியுள்ளது என்பதை நீங்களே பாருங்கள். குற்றம் சொன்னால் மட்டும் சித்தராமையாவுக்கு கோபம் வருகிறது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பிரச்சினை கிளப்புவோம்

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “பெங்களூருவில் சேதம் அடைந்துள்ள சாலைகள் சித்தராமையா அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் இதுபற்றி நாங்கள் பிரச்சினை கிளப்புவோம். நகர சாலைகள் நரக சாலைகளாக மாறிவிட்டன. இந்த சாலைகளால் பலர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர். இந்த மரணங்கள் நியாயமா?” என்றார்.

அதைத்தொடர்ந்து ஆர்.அசோக் கூறுகையில், “தூக்கத்தில் உள்ள சித்தராமையா விழித்தெழ வேண்டும். இந்த பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு நகர மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார். 

Next Story