மும்பை உள்பட 4 மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல்: பா.ஜனதா அபார வெற்றி


மும்பை உள்பட 4 மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல்: பா.ஜனதா அபார வெற்றி
x

மராட்டியத்தில் மும்பை உள்பட 4 மாநகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது.

மும்பை, 

மும்பை பாண்டுப் மேற்கில் உள்ள 116-வது வார்டு கவுன்சிலராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமிளா பாட்டீல் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார்.

இடைத்தேர்தல்

இதையடுத்து அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மாநகராட்சியில் அதிகாரம் செலுத்தி வரும் சிவசேனா சார்பில் மீனாட்சி பாட்டீலும், பா.ஜனதா சார்பில் ஜாக்ருதி பாட்டீலும், காங்கிரஸ் சார்பில் பிரமிளா சிங்கும் போட்டியிட்டனர்.

இவர்கள் உள்பட மொத்தம் 7 பேர் இடைத்தேர்தல் களத்தில் இருந்தனர். அந்த வார்டில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 50.64 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இது தவிர புனே, கோலாப்பூர் மற்றும் நாக்பூர் மாநகராட்சிகளிலும் தலா ஒரு இடத்துக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை

மேற்படி 4 மாநகராட்சி வார்டுகளிலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

பாண்டுப்பில், 11 ஆயிரத்து 129 வாக்குகள் பெற்று பா.ஜனதா வேட்பாளர் ஜாக்ருதி பாட்டீல் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் மீனாட்சி பாட்டீலை விட 4 ஆயிரத்து 792 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தார். மீனாட்சி பாட்டீலுக்கு 6 ஆயிரத்து 337 வாக்குகள் கிடைத்தன.

இந்த வெற்றியின் மூலம் 227 உறுப்பினர்களை கொண்ட மும்பை மாநகராட்சியில் பா.ஜனதாவின் பலம் 82 ஆக அதிகரித்து உள்ளது.

பா.ஜனதா கூட்டணி வெற்றி

இதேபோல், மற்ற 3 மாநகராட்சி வார்டுகளிலும் பா.ஜனதா வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினர்.

நாக்பூரில், 35-ஏ வார்டில் அக்கட்சி வேட்பாளர் சந்தீப் கவாயும், புனே 21-ஏ வார்டில் நவநாத் காம்பிளேயும் வெற்றி கனியை ருசித்தனர். கோலாப்பூர் வார்டு எண் 11-ல் பா.ஜனதா ஆதரவு பெற்ற தாரா ராணி அகாடி பக்‌ஷ் என்ற உள்ளூர் அமைப்பின் வேட்பாளர் ரத்னேஷ் சித்தோல்கர் வெற்றி பெற்றார்.

பா.ஜனதாவின் இந்த வெற்றி குறித்து அக்கட்சியின் மும்பை நகர தலைவர் ஆசிஷ் ஷெலார் கூறுகையில், “பாண்டுப் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சிவசேனா கட்சியினர் உயரிய வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால், வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டனர். பிரதமர் மோடியும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பின்பற்றும் வளர்ச்சி பணிகளுக்கு சாதகமாக பொதுமக்கள் அளித்த கட்டளையே இந்த தேர்தல் முடிவு” என்றார். 

Next Story