பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் போது மடிக்கணினி வழங்கப்படும்


பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் போது மடிக்கணினி வழங்கப்படும்
x
தினத்தந்தி 13 Oct 2017 3:30 PM IST (Updated: 13 Oct 2017 11:43 AM IST)
t-max-icont-min-icon

வருகிற கல்வி ஆண்டு முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் போது விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கரூர்,

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் 45-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுப்புற கண்காட்சி, அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கு தொடக்க விழா கரூர் வெண்ணைமலை பரணிபார்க்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற்று சிறந்து விளங்க பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் எந்த பொதுத்தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் நவம்பர் மாதத்திற்குள் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ஐதராபாத்தில் 54 ஆசிரியர்கள் பயிற்சி பெற அனுப்பப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு பயிற்சி பெற்ற பிறகு அவர்கள் வந்ததும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் மூலம் பிளஸ்-2 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை அனைத்தும் கணினிமயமாக்க ரூ.486 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது இந்த ஆண்டு தாமதமாகி விட்டது. கோர்ட்டில் வழக்கு இருந்ததால் காலதாமதமானது. வருகிற கல்வி ஆண்டு முதல் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கியதும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மாணவர்கள் சிறந்த கல்வியாளர்களாக வர முடியும்.

பள்ளிக்கல்வி துறையில் பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையாக மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. அதே நேரத்தில் தமிழர் பண்பாடு, கலாசாரம், தொன்மை மாறாமல் இருக்கும். எதிர்காலத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியாக இருக்கும். பிளஸ்-2 படிப்பு முடித்தாலே வேலைவாய்ப்புக்கு இனி உத்தரவாதம்.

வருகிற 2018-19-ம் ஆண்டிற்கு 3, 6, 9, பிளஸ்-1 ஆகிய வகுப்பிற்கும், 2019-20-ம் ஆண்டில் 2, 7, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-21-ம் ஆண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கண்காட்சி மலரை அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வெளியிட்டனர். விழாவில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், பள்ளியின் தாளாளர் மோகனரங்கம் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள், அ.தி.மு.க. (அம்மா) கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கல்வி துறை துணை இயக்குனர் செல்வகுமார் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் நன்றி கூறினார். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து கண்காட்சியில் மாணவர்கள் அமைத்திருந்த படைப்புகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டனர். கண்காட்சியில் 6 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களின் படைப்புகளும், ஆசிரியர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 157 படைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) கண்காட்சி நடக்கிறது.

Next Story