செல்போன்களை பறித்து போதை மாத்திரை வாங்கிய 4 பேர் கைது விற்றவரும் சிக்கினார்


செல்போன்களை பறித்து போதை மாத்திரை வாங்கிய 4 பேர் கைது விற்றவரும் சிக்கினார்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:30 AM IST (Updated: 14 Oct 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் செல்போன்களை பறித்து போதை மாத்திரை வாங்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரைகளை விற்றவரும் சிக்கினார்.

திருவொற்றியூர்,

சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி சென்ற லாரி டிரைவர்கள் 2 பேர் எண்ணூர் விரைவு சாலையில் வந்தனர். திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் அருகே லாரியை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் டிரைவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து டிரைவர்கள் அருகிலுள்ள போலீசாரிடம் சென்று தெரிவித்தனர். அவர்கள் 4 வாலிபர்களையும் போலீசார் விரட்டி சென்றனர்.

போதை மாத்திரை

போலீசாரிடம் இருந்து தப்பிக்க உடைந்த கப்பல் அருகே ஒரு வாலிபர் கடலில் குதித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருவொற்றியூரை சேர்ந்த ராம்குமார் (வயது 18) என தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (18), சூர்யா (22), சுரேந்தர் (18) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

அவர்களிடம் சோதனை செய்தபோது 4 செல்போன்கள், போதை மாத்திரைகளும் இருந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் செல்போன்களை பறித்து சென்று திருவொற்றியூர் அம்சாத் தோட்டத்தை சேர்ந்த பாபுவிடம் (36) கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியது தெரிந்தது.

5 பேர் கைது

உடனே போலீசார் அங்கு சென்று போதை மாத்திரைகளை விற்ற பாபுவை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 17 செல்போன்கள், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story