தாம்பரம் அருகே மாயமான ஆட்டோ டிரைவர் படுகொலை
தாம்பரத்தில் மாயமான ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். மதுகுடித்த தகராறில் அவரை நண்பர்களே வெட்டிக்கொன்று உடலை கல்லைக்கட்டி ஏரியில் வீசி உள்ளது தெரியவந்து உள்ளது.
தாம்பரம்,
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், லட்சுமிநகர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(வயது28). ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 10-ந்தேதி இரவு 8 மணியளவில் அவரது நண்பர்களுடன் வெளியே சென்றார்.
அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரைபற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நண்பர் சிக்கினார்
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவுசெய்து அவரை தேடி வந்தனர்.
ஆட்டோ டிரைவர் மாயமானது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது குடும்பத்தினர் அலெக்சாண்டரின் நண்பர் ஹரிஹரன் மீது சந்தேகமாக இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
கொன்று உடலை ஏரியில் வீசிய கொடூரம்
அதைத்தொடர்ந்து போலீசார் மேற்கு தாம்பரம் திருவள்ளுவர்புரம் 2-வது தெருவைச்சேர்ந்த மீன் வியாபாரியான ஹரிஹரன் (20) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் மாயமான ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
விசாரணையில் ‘மீன் வியாபாரியான ஹரிஹரன், அலெக்சாண்டர், சுரேஷ் ஆகிய மூன்று பேரும் பெருங்களத்தூர் பெரியஏரிக்கரையில் ஒன்றாக அமர்ந்து மது குடித்து உள்ளதும், அப்போது ஏற்பட்ட தகராறில் அலெக்சாண்டரை அவர்கள் வெட்டிக்கொலை செய்து விட்டு, அவரது உடலை கல்லைக்கட்டி ஏரியில் வீசியதும்’ தெரியவந்தது.
உடல் மீட்பு
இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இடத்தில் பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பீர்க்கன்காரணை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது ஏரியில் கல்லை கட்டிய நிலையில் அலெக்சாண்டரின் உடல் கிடந்தது. அந்த உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அலெக்சாண்டர் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை தேடிவந்தனர். இந்நிலையில் சுரேஷ் நேற்று இரவு பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆட்டோ டிரைவர் மதுகுடித்த தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணத்தினால் கொலை செய்யப்பட்டரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story