டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் நெருக்கடி: சேலம் மாநகர் நலஅலுவலர் திடீர் ராஜினாமா


டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் நெருக்கடி: சேலம் மாநகர் நலஅலுவலர் திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 14 Oct 2017 4:30 AM IST (Updated: 14 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக சேலம் மாநகர் நல அலுவலர் மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு திடீரென ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பகுதிக்கு டெங்கு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் தற்போது, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்துதான் பெறப்பட்டு வருகிறது. ஆனால், அதுவும் தரமான மருந்து இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதனால், டெங்கு பரப்பும் ‘ஏடிஸ்‘ வகை கொசுக்களை ஒழிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. அதேவேளையில் சேலம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு சேலம் மாநகராட்சி பகுதியில்தான் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்னை சுகாதாரத்துறை அதிகாரி காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு நடத்தினார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சேலம் மாநகராட்சி பகுதியில்தான் முறையான டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சில அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பெண் சுகாதார அதிகாரிகள், சேலம் மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரனை கடுமையாக கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சேலம் மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் பிரபாகரன் எவ்வளவோ எடுத்து கூறியும், அதை பொருட்படுத்தவில்லையாம். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாநகர் நல அலுவலர் பிரபாகரன் கண்கலங்கியபடி, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

பின்னர் சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர், தனது சேலம் மாநகர்நல அலுவலர் பணியை ராஜினாமா செய்வதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், “நான் சேலம் மாநகராட்சியில் மாநகர் நல அலுவலராக கடந்த 4.8.2017 அன்று முதல் பணியாற்றி வருகிறேன். தற்போது எனது சொந்த காரணங்களால் இந்த பணியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே, என்னை பணியில் இருந்து விடுவிக்க கேட்டுக்கொள்கிறேன்“ என கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதத்தில் மாநகர்நல அலுவலர் கையெழுத்திடவில்லை.

இந்த கடிதம் சேலம் மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட கலெக்டர், சென்னை பொதுசுகாதாரம் மற்றும் மருந்துகள் இயக்குனர், சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆை-ணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது. இந்த தகவல் நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் மட்டுமின்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கிடையே, நேற்று காலை கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்த டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் மாநகர்நல அலுவலரான டாக்டர் பிரபாகரன் பங்கேற்கவில்லை. அவரது செல்போன் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு, மாநகராட்சி அலுவலகத்திற்கு அவர் வந்தார். சுமார் 1 மணிநேரம் அலுவலகத்தில் இருந்த அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘ராஜினாமா கடிதம் அனுப்பியது உண்மைதான். சேலம் மாநகரில் நான் பணியாற்றிய 2 மாதங்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், என் பணி குறித்து சக அதிகாரிகளுக்கும், மாநகராட்சி மக்களுக்கும் தெரியும். என் மீது வேண்டும் என்றே தவறான தகவலை ஏன் தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை“ என்றார்.

இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் டாக்டர் விஜயலட்சுமி, மாநகராட்சி டெங்கு சிறப்பு பணிக்கான பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story