திருவிடைமருதூர் அருகே ரெயிலில் அடிபட்டு ஜோதிடர் பலி


திருவிடைமருதூர் அருகே ரெயிலில் அடிபட்டு ஜோதிடர் பலி
x
தினத்தந்தி 14 Oct 2017 3:30 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே மூடப்பட்ட கேட் வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு ஜோதிடர் பரிதாபமாக இறந்தார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் வடக்குவீதியை சேர்ந்தவர் செல்வம்(வயது42).ஜோதிடர். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். செல்வத்தின் மகள் கர்ப்பமாக இருந்ததால் அவரை பிரசவத்துக்காக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்க்க வசதியாக செல்வம் தனது குடும்பத்துடன் திருவிடைமருதூர் பிச்சைக்கட்டளை புதுத்தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று காலை 5.30 மணியளவில் செல்வம் டீ குடிக்க அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது வழியில் ரெயில்வே கேட் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் செல்வம் பூட்டப்பட்டிருந்த கேட்டின் கீழ் பகுதி வழியாக குனிந்து சென்று தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வம் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். செல்வம் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story