தமிழகத்தில் 6 மாதத்தில் பொதுத்தேர்தல் வரும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


தமிழகத்தில் 6 மாதத்தில் பொதுத்தேர்தல் வரும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 14 Oct 2017 5:00 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 6 மாதத்தில் பொதுத்தேர்தல் வரும் என்று திருப்பூரில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

திருப்பூர்,

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவி வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஆரஞ்சு, ஆப்பிள், ரொட்டி, பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 60 பேரும், திருப்பூரில் 40 பேரும் டெங்கு காய்ச்சலுக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு ஒரே கட்டிலில் 3 சிறுவர்களை படுக்க வைத்து சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இது வேதனையாக உள்ளது. தமிழகத்தில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. திருப்பூரில் அருள்புரத்தில் ஒரு தெருவில் டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது. சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கிநிற்கிறது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பூரை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் அதிகமாக டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். திருப்பூரில் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வந்து வேலை செய்து வருகிறார்கள். சாயக்கழிவுநீர் சாக்கடையுடன் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் சாக்கடை மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கு ஆள் இல்லை. அதன்காரணமாகவே தமிழகத்தில் இன்று டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த ஆஸ்பத்திரியில் 2 பேர் இறந்துள்ளனர். ஆனால் அரசு வெறும் 40 பேர் இறந்துள்ளனர் என்று பொய் சொல் கிறது. மக்களுக்கான சிகிச்சையை அரசு மேற்கொள்ளவில்லை.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுய லாபத்துக்காக டெல்லிக்கு சென்றுள்ளார். இங்குள்ள அமைச்சர்களும் தனது பதவியை தக்க வைத்துக்கொள்வதில் தான் ஆர்வமாக உள்ளனர். நொய்யல் ஆற்றில் நுரையுடன் தண்ணீர் சென்றதற்கு, மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் என்று அமைச்சர் கருப்பணன் கூறியிருக்கிறார். எனக்கு அந்த நுரையை பார்த்தால் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தான் தெரிகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் பாவத்தை போக்க குளிக்கிறார். உண்மையில் உங்களுடைய பாவத்தை போக்க வேண்டும் என்றால் இந்த நொய்யல் ஆற்றில் குளிக்க தயாரா? என்று கேட்கிறேன். நொய்யல் ஆறு இல்லை, அக்னி குண்டத்தில் இறங்கினாலும் அவர்கள் பாவம் தீரப்போவதில்லை. அந்த அளவுக்கு லஞ்சம், ஊழல் செய்து மக்களை வஞ்சித்துள்ளனர். இந்த நிலைமை மாற வேண்டும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்து டெங்கு பரவாமல் தடுப்பது அரசின் கடமையாகும்.

திருப்பூரில் காலையிலேயே மதுக்கடைகள் திறக்கப்படுவதாக பெண்கள் என்னிடம் புகார் மனு கொடுத்தனர். தீபாவளிக்கு கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று அரசு மதுவின் விலையை அதிகரித்துள்ளது. மக்களை அரசு கவனிக்கவில்லை. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஒவ்வொரு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆய்வு செய்தால் மக்களுக்கு சரியான, துரிதமான சிகிச்சை கிடைக்கும். ரூ.200, ரூ.300 வாங்கி ஓட்டு போடாதீர்கள். மக்கள் மாற வேண்டும். நல்ல தமிழகமாக மாற தே.மு.தி.க.வுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு வராது. ஆட்சி கவிழப்போவது உறுதி. கவர்னர் ஆட்சி வரும். அதுக்குப்பிறகு 6 மாதத்தில் பொதுத்தேர்தல் வரும். அதன்பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அடுத்த மாதம் 4-ந் தேதி நல்ல தீர்ப்பு வரும். யார் திட்டம் போட்டாலும் நீதிபதிகள் நல்ல நீதி வழங்கி தமிழகத்தை காப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 2 குழந்தைகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் பெயர் சூட்டினார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவதை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கிவைத்தார். 

Next Story