நெய்வேலி அருகே 1 மணி நேரம் ரெயில்வே கேட்டை மூடியதால் கேட் கீப்பருக்கு அடி-உதை


நெய்வேலி அருகே 1 மணி நேரம் ரெயில்வே கேட்டை மூடியதால் கேட் கீப்பருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 14 Oct 2017 4:00 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே 1 மணி நேரம் ரெயில்வே கேட்டை மூடியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை அடித்து உதைத்தனர். அந்த சமயத்தில் ஆய்வுக்காக வந்த பாதுகாப்பு அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்தாரக்குப்பம்,

நெய்வேலி நகரத்துக்கும், மந்தாரக்குப்பத்துக்கும் இடையே வடக்கு வெள்ளூரில் ரெயில்வே கேட் உள்ளது. கடலூர்-விருத்தாசலம் இடையே தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது மட்டும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் வடக்கு வெள்ளூரில் கேட் மூடப்படும். பின்னர் ரெயில் சென்றதும், மீண்டும் ரெயில்வே கேட் திறக்கப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வடக்குவெள்ளூர் ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. ரெயில் வரும், அதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதாக நினைத்து சாலையில் இருபுறமும் பொதுமக்கள் வாகனத்துடன் காத்திருந்தனர். 2.30 மணி வரையிலும் அந்த ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.இதனால் சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வெகுநேரமாக காத்திருந்த பொதுமக்கள், எதற்காக ரெயில்வே கேட் மூடி வைத்துள்ளர்கள் என்று கேட் கீப்பரான கபூர் மீனாவிடம் கேட்டனர். அதற்கு அவர், திருச்சி கோட்ட ரெயில் தண்டவாள பாதுகாப்பு அதிகாரி டிராலி மூலம் ஆய்வு செய்து வருவதாகவும், அதற்காக மூடியிருப்பதாகவும் கூறினார்.

ஆய்வுக்காக ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட்டை மூடுவதா? என்று பொதுமக்கள் கேட்டனர். இதனால் ரெயில்வே கேட் கீப்பருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு சிலர், கேட் கீப்பர் கபூர் மீனாவை அடித்து உதைத்தனர்.

அந்த சமயத்தில் விருத்தாசலம் மார்க்கத்தில் இருந்து டிராலியில் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான ஒரு குழுவினர் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் பொதுமக்கள், டிராலியை வழிமறித்து அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அவரையும் தாக்க முயன்றனர். அவர்களை சிலர், அதிகாரியை தாக்குவது நல்லதல்ல என்று கூறி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதிகாரி உத்தரவை தொடர்ந்து உடனடியாக ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அந்த வழியாக சென்றனர்.

வாகனங்கள் அனைத்தும் சென்றபிறகுதான் ஆய்வுக்காக செல்ல வேண்டும் என்று கூறி பொதுமக்கள், அந்த அதிகாரி செல்லாத வகையில் டிராலியின் முன்பு நின்று கொண்டனர். சாலையின் இருபுறமும் நின்ற வாகனங்கள் செல்ல 20 நிமிடங்கள் ஆகின.

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த அதிகாரி ஆய்வுக்காக செல்ல வழிவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story