டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்துத்துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைப்பு


டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்துத்துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 14 Oct 2017 4:00 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்துத்துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளில் மழைநீர் தேங்குவதை தடுத்தல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணியை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதாரப்பணிகளை அவர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து லக்காபுரம் ஊராட்சி புதுவலசு பள்ளிவாசல் பகுதியில் நடந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை பார்வையிட்டார். அங்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை அவர் ஆய்வு செய்தார்.

இதேபோல் சின்னகருக்கம்பாளையம் பகுதியில் நடந்த மருத்துவ முகாமை கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஒவ்வொரு தாலுகாவுக்கும் தலா 40 பணியாளர்கள் வீதம் 560 பேரும், பேரூராட்சிகளில் 20 பணியாளர்கள் வீதம் 840 பேரும், ஈரோடு மாநகராட்சியில் 300 பணியாளர்களும், பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் 250 பணியாளர்களும் என மொத்தம் 1,950 களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க அபேட் மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், குடிநீரில் குளோரின் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த பணியை மேற்கொண்டு துரிதப்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்” என்றார்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி உடனிருந்தார். 

Next Story